30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு - Yarl Voice 30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு - Yarl Voice

30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. குறித்த வைத்தி சாலையை தமது உல்லாச விடுதியாக இராணுவத்தினர் பயன்படுத்திவந்தனர்.

இந்த வைத்தியசாலையானது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள காரணத்தினால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிறந்த முறையில் சிகிச்சை பெறுவதற்குரிய சரியான இடம் இந்த வைத்தியசாலை என் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு இந்த வைத்தியசாலை விடுவிக்கப்பட வேண்டும் என தொடர்சியான கோரிக்கைகள் பாதுகாப்பு தரப்பிடம் முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை படையினர் கையளித்துள்ளனர்.

இந்த வைத்தியசாலை அண்மைய தினம் வரையில் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தமையினால் தற்போது உடனயடியாக இது வைத்தியசாலையாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. வைத்திய சாலைக்குரிய அமைப்புக்கள் மாற்றப்பட்டுள்ளன எனவே வைத்தியசாலையாக புனரமைக்கப்பட்ட பின்னரே மருத்துவ சேவைகளை ஆரம்பிக்க முடியும் என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post