12 எம்.பிக்களை இடை நீக்கம் செய்தது மாலத்தீவு நீதிமன்றம் |
எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்து மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலத்தீவில் 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை அமல்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் அப்துலா யாமீன் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியும் , முன்னாள் அதிபரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக செயல்பட்ட எதிர்க்கட்சிகள் 12 பேரை இடைநீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த மாதம் முதல் வாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்கவும் 12 எம்பிக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது எனவும் தலைமை நீதிபதி அறிவித்தார். இந்த உத்தரவின் படி, 12 எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தால் அதிபருக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் அவர்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய அதிபர் மறுத்துவிட்டார். மேலும், சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஏற்க முடியாது என அதிபர் யாமீன் தெரிவித்தார்.
இதனால், யாமீனை அதிபர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காய் நகர்த்தினார். தனது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டதால், கடந்த 5-ம் தேதி நெருக்கடி நிலையை அதிபர் பிரகடணம் செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
நாளையுடன் நெருக்கடி நிலை முடிவடையும் நிலையில், 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என முன்னர் பிறப்பித்த உத்தரவில் இருந்து உச்ச நீதிமன்றம் மாறியுள்ளது. மீண்டும் அவர்கள் 12 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிபர் யாமீனின் அரசுக்கு இருந்த சிக்கல் தற்காலிகமாக விலகியுள்ளது.
Post a Comment