ரஸ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 71பேரும் பலியாகியுள்ளனர்.
சராடோவ் ஏர்லைன்ஸின் ஏஎன்148 என்ற இந்த விமானம், கஜகஸ்தான் உடனான ரஸ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இவ்விமானத்தில் 65பயணிகள் மற்றும் 6விமான குழுவினர் உட்பட 71பேர் பயணித்துள்ளனர். நேற்றுமுன்தினம் மதியம் டோமோடெடோவோ என்ற இடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்த விமானத்தின் தொடர்பு சில நிமிடங்களிலே துண்டிக்கப்பட்டுள்ளது.
1000மீற்றர் வேகத்தில் விழுந்த விமானம்
இந்த விமானம் ஒரு நிமிடத்துக்கு 3,300அடிகள் கீழ் இறங்கியதாகவும், 1,000 மீற்றர்கள் வேகத்தில் தரையை நோக்கி விழுந்ததாகவும் விமான கண்காணிப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. பனி படர்ந்த நிலத்தில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதை இந்த தளத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன. இதனருகில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பின்னரே விபத்து நடந்துள்ளது. மாஸ்கோவின் தென்கிழக்கில் 80கிலோமீற்றர் தொலைவில் உள்ள அர்குனோவோ பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் விமானம் எரிந்தவாறு கீழே விழுவதை மக்கள் பார்த்ததாக ரஸ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தின் கருவி மீட்பு
விபத்திற்குள்ளான விமானத்திலிருந்து எவ்வித அவசர அழைப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. விமானத்தின் பதிவு கருவிகளில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
புடின் இரங்கல்
ரஸ்ய ஜனாதிபதி புடின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மற்றும் விபத்துக்கு காரணத்தை கண்டுபிடிக்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தின் காரணமாக தாங்கள் பெரிதும் வருத்தமடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.
விசாரணைகள் ஆரம்பம்
விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக ரஸ்ய துப்பறிவாளர்கள் அந்த இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். விபத்திற்கான காரணமாக வானிலை, மனித தவறுகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றை சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment