லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது 90 குடியேறிகளின் நிலை கவலைக்கிடம் - Yarl Voice லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது 90 குடியேறிகளின் நிலை கவலைக்கிடம் - Yarl Voice

லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது 90 குடியேறிகளின் நிலை கவலைக்கிடம்

போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர்.

சமீபகாலமாக பாகிஸ்தானில் இருந்தும் இப்படி கள்ளத்தனமாக கடல்வழியாக பயணித்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடையும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 90 குடியேறிகளுடன் புறப்பட்டு சென்ற படகு லிபியா நாட்டில் உள்ள ஜுவாரா நகரையொட்டியுள்ள கடல் பகுதியில் இன்று கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படகில் வந்த அனைவரும் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் இதுவரை 10 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 8 பேர் பாகிஸ்தானியர்கள் இருவர் லிபியா நாட்டினர் என தெரியவந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post