ரோஹித் சர்மாவின் சாதனைய முறியடித்த விராட் |
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 5க்கு1 என கைப்பற்றி சாதனைப் படைத்தது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில், செஞ்சூரியனில் நடந்த கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்குப் பதில் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட ஷர்துல் தாகூர், தென் ஆப்பிரிக்காவின் இரு தொடக்கவீரர்களையும் வீழ்த்தி அசத்தினார். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த தென் ஆப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
தென் ஆப்ரிக்க அணியின் கயா ஷோண்டோ மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார். பெகுல்வாயோ 34 ரன்களும், டி வில்லியர்ஸ் 30 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி 46புள்ளி 5 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணியின் சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பூம்ரா மற்றும் யுவேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா 15 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் தவான் 18 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
அதேநேரத்தில் தனது வழக்கமான அதிரடியை தொடர்ந்த கேப்டன் விராட் கோலி 82 பந்துகளில் தனது 35-வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த மகிழ்ச்சியில், இம்ரான் தஹீர் பந்தில் அடுத்தடுத்து இரு
சிக்சர்களை பறக்கவிட்டு செஞ்சூரியனில் கூடியிருந்த இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் விராட் கோலி.
கோலிக்கு உறுதுணையாக விளையாடிய அஜிங்கா ரஹானே ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 32புள்ளி 1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி கடைசி வரை அவுட் ஆகாமல் 129 ரன்கள் குவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5க்கு1 என கைப்பற்றியது.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி, தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த தொடரில் 3 சதங்கள் விளாசிய கோலி மொத்தம் 558 ரன்கள் குவித்து சாதனைமேல் சாதனைப் படைத்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற கோலி, ஒரு தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் ரோஹித் சர்மாவின் சாதனையையும் முறியடித்தார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா 491 ரன்கள் எடுத்திருந்தார்.
மேலும், 2018 ஆம் ஆண்டு தொடங்கி 47 நாட்கள் மட்டுமே நிறைவுற்ற நிலையில், ஆறே போட்டிகளில் 500 ரன்களை தாண்டி கோலி சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய ஜாம்பாவான் டெண்டுல்கர் 69 நாட்களில் 500 ரன்கள் கடந்து சாதனைப் படைத்திருந்தார்.
Post a Comment