ஹபீஸ் சயீதை பயங்கரவாதி என பாகிஸ்தான் அரசு அறிவிப்பு! |
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுன் தொடர்புடைய ஹபீஸ் சயீதை, பயங்கரவாதி என பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது ஜமாத் உத் தவா இயக்கம் உள்பட ஏராளமான இயக்கங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஹபீஸ் சயீத் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ள தனி நபர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய வகை செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைன் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ளார்.
ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்து சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையமும் உறுதி செய்துள்ளது.இதன்படி, ஐ.நா. பாதுகாப்பு அவையின் பயங்கரவாதப் பட்டியலில் உள்ள அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு பாகிஸ்தானிலும் தடை விதிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையே இந்தச் சட்டத்தில் கையெழுத்திடப்பட்டாலும், தற்போதுதான் அது வெளியிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீது. மும்பையில், 2008ல் நடந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீசை தேடப்படும் குற்றவாளியாக ஐ.நா. அறிவித்து உள்ளது.
லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐ.நா. தடை விதித்துள்ளது.
Post a Comment