ஹர்த்தாளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு - Yarl Voice ஹர்த்தாளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு - Yarl Voice

ஹர்த்தாளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு

காணாமல் போக செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள ஹர்த்தாள் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது.

இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே போராட்டத்திற்கான ஆதரவு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசும் மக்கள் பிரதிநிதிகளும் வேண்டுமென்றே பாராமுகமாயிருப்பது நாட்டுக்கே பெரும் அவமானம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒருவருடத்தினை எட்டியுள்ளது.

அரசும், வெற்றிபெற்ற தமிழ் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமல் விட்ட ஒருசில முக்கிய பிரச்சிகைளில் இதுவுமொன்று.

பேரம் பேச திராணியற்று அரசிடம் சோரம் போன தமிழ் தலைமைகளின் செயற்பாடுகளால் இந்த பிரச்சினை நீண்டுகொண்டே போகின்றது.

அரசு இதற்கு ஒரு தீர்வினை உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழ் மக்கள் பிரதிநிதிகள்; அரசுக்கு கொடுத்த போதுமானதல்ல. அன்றேல் மக்களிற்கு விசுவாசமாக அவர்கள் செயற்படவில்லை என்பதே தெளிவாகின்றது.
தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு காட்டுகின்ற வேகத்தினை இவ்விடயத்திலும் காட்டியிருக்க வேண்டும். தமிழர்களின் அதிகபடியான வாக்குகளால் வெற்றிபெற்ற நல்லிணக்க அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஒன்றான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு ஒரு நியாயமான தீர்வினை கூறாமல் காலம்கடத்தி இழுத்தடித்து பின்னர் கைவிட்டமை ஜனநாயகத்தை விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதை அரசுக்கு எடுத்து கூறி தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாத தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் கையாளாகதனத்தை எண்ணி அவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

வெற்றி பெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை இவர்களை பார்த்து சென்றும் பாராமுகமாய் இருப்பது வேதனை தரும் விடயமாகும். இவர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத தமிழ் பிரதிநிதிகள் தமது பதவிகளை துறக்க வேண்டும்.

இதுவரை தமது உறவுகளை தொலைத்த வலிகளுடன் எட்டு பெற்றோர் தமது உயிர்களை பிரிந்தது உலகறிந்த விடயமாகும். ஏனைய தாய்மார்களும் வீதிகளில் இவ்வாறு கண்ணீர்களோடு போராடிக்கொண்டுள்ளனர். இவர்கள் கைகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பிலான உண்மை நிலைமை என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

இதே போன்று எவ்வித குற்றச்சாட்டுக்களும் உறுதிப்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசு வழிவகுக்க வேண்டும். இவ்வாறான எமது தமிழ் இளைஞர் யுவதிகளின் பாரிய பிரச்சினைகளிற்கான தீர்வுகள் வழங்கப்படும்வரை தமிழர் விடுதலை கூட்டணி தொடர்ந்தும் வலியுறுத்தும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது தமிழர் விடுதலை கூட்டணியின் தொடர்ச்சியான நிலைப்பாடாகும்.

இதே வேளை நாளை செய்வாய்க்கிழமை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழர் விடுதலை கூட்டணி முழுமையாக ஆதரவு வழங்கும் என்பதுடன், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், போக்குவரத்து சேவையினரின் ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றது என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post