காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளியானது! |
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நடுவர் நீதிமன்றம் தீர்ப்பைத் தாண்டி மேலும் 72 டிஎம்சி நீரை பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், 192 டிஎம்சி நீரை அளிக்க முடியாது என கர்நாடகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 9ம் தேதியன்று காவிரி வழக்கின் தீர்ப்பை 4 வாரத்தில் வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வழங்கினர். அதில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகாவிற்கு 184.75 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கி உத்தவிட்டது. 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கெனவே இருந்த உத்தரவிலிருந்து 14 டி.எம்.சி. தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாக விவசாயிகள் கருதுகின்றனர்.
Post a Comment