நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படுமென சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கம் தொடர்பான இரண்டு வருட கால ஒப்பந்தம், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்வது குறித்து பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், அதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படுமென ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment