ஏராளமான வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளன - மம்தா பானர்ஜி |
பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமல்லாமல் ஏராளமான வங்கிகளில் மோசடி நடந்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ``ஏராளமான வங்கிகளில் ஊழல்கள் நடந்து வருகின்றன. ஆனால் அந்த வங்கியின் தலைவர்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு காப்பாற்றி வருகிறது. அவர்களுக்கு யார் உதவுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ``பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பே இதுபோன்ற மோசடிகள் குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் அதிகாரிகள் நியமனம் சந்தேகத்துக்குரிய வகையில் நடைபெற்றுள்ளது. அவர்கள் அளித்துள்ள ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் நம்பகத்தன்மையற்று இருக்கிறது. மக்களின் பணம் பாதுகாக்கப்படாத வரை, நான் மத்திய அரசை விடமாட்டேன். மக்கள் மிகக் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து இருக்கிறார்கள். ஆனால், நிதி தீர்வு மற்றும் காப்பீடு மசோதா என்ற பெயரில் அந்தப் பணத்தை அபகரிக்க மத்திய அரசு முயல்கிறது. இதை கடுமையாக எதிர்த்து நிதி அமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன்.
திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை, மக்கள் பணத்துக்காக விலை போக மாட்டார்கள். மக்களைக் கட்டாயப்படுத்தி எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது. ஜனநாயகத்தை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது '' என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Post a Comment