அமெரிக்காவில் கோட்டாவுக்கு எதிராக களமிறங்குகிறார் பிரபல சட்டத்தரணி - Yarl Voice அமெரிக்காவில் கோட்டாவுக்கு எதிராக களமிறங்குகிறார் பிரபல சட்டத்தரணி - Yarl Voice

அமெரிக்காவில் கோட்டாவுக்கு எதிராக களமிறங்குகிறார் பிரபல சட்டத்தரணி

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே நடத்துகின்றார்.
ஊடகவியலாளர் மேரி கொல்வின் படுகொலை வழக்கில் சிரிய அரசுக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்று, 300 மில்லியன் டொலர்களை அபராதமாகச் செலுத்த வைத்தவர் அவர்.
இந்நிலையில், கோட்டாபயவுக்கு எதிராக இரு வழக்குகள் அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கோட்டாபயவுக்கு எதிராக லசந்தவின் மகள் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதேவேளை, தன்னைக் கொடூரமாக இலங்கையில் சித்திரவதை செய்ததாக கோட்டாபயவுக்கு எதிராக தமிழர் ஒருவர் கலிபோர்னியாவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கொலைகள் மற்றும் சித்திரவதை செய்வதற்கான உத்தரவு மற்றும் கட்டளைகள் அனைத்தும் கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்டது எனவும், இந்தச் செயற்பாடுகளுக்கு கோட்டாபய சட்டபூர்வமாக பொறுப்புக் கொண்டவர் எனவும் சட்டத்தரணிகள் வாதாடவுள்ளனர்.
எனினும், கோட்டாபய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டிருந்ததாக பல ஆண்டுகளாக கோட்டாபய தனது பகிரங்க அறிக்கைகளில் தெளிவுபடுத்தியுள்ளார் என சட்டத்தரணி ஸ்கொட் கிள்மர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் ஐ.நா. சபையினால் ஆவணப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டதுடன் இலங்கை அரசு இந்தக் குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டது.
பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதா அல்லது சரியான முறையிலேயே செயற்பட்டார்களா என நன்கு அறிந்திருந்தார் கோட்டாபய. ஆனால், அவர் குற்றவாளிகளை விசாரணை செய்ய அல்லது தண்டிக்க சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்நிலையில், இது தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன எனக் குறிப்பிடப்படுகின்றது.
சட்டத்தரணியான ஸ்கொட் கிள்மரே பல்வேறு வழக்குகளை வாதாடி வெற்றி பெற்றுள்ளார். இதன்காரணமாக கோட்டாபயவுக்கு எதிராக தீர்ப்புகள் வரலாம் என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கோட்டாபய கைது செய்யப்படலாம் என ராஜபக்ச குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post