ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் தமிழ்மக்களைத் தோல்வியடையச் செய்து விட்டார்கள் - மரநடுகை மாத விழாவில் பொ. ஐங்கரநேசன் - Yarl Voice ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் தமிழ்மக்களைத் தோல்வியடையச் செய்து விட்டார்கள் - மரநடுகை மாத விழாவில் பொ. ஐங்கரநேசன் - Yarl Voice

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் தமிழ்மக்களைத் தோல்வியடையச் செய்து விட்டார்கள் - மரநடுகை மாத விழாவில் பொ. ஐங்கரநேசன்


நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்குச்  சரியான  வழிகாட்டுதலைச் செய்யத் தவறிவிட்டனர். அஜித் ரசிகர்கள்  அஜித்தைக் கொண்டாடுவதைப் போல, ரசிக மனோ நிலையில் சஜித்தைக் கொண்டாட வைத்துள்ளனர். விஜயகலா அம்மையார் இனிமேல் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள்தான் தேசியத் தலைவர்  என்றார். அவரை அடியொற்றி சஜித் பிரேமதாசா அவர்களை எமது தமிழ்த் தலைமைகள்  தேசியத் தலைவராக்க  முயன்று தாங்களும் தோற்று,  அரசியல் ரீதியாகத் தமிழ்மக்களையும் தோல்வியடையச் செய்து விட்டார்கள்  என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்த்pன்  தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மரநடுகை மாத விழாவில் கலந்து கொண்டு  உரையாற்றியபோதே  பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக நிறுவுவதற்கு ஜனாதிபதித் தேர்தலில்  அவர்களின்  முன்னால் இரண்டு தெரிவுகள்தான்  இருந்தன. ஒன்று, தேர்தலைப் பகிஸ்கரிப்பது.  மற்றையது, தமிழர்கள் சார்பாக ஒரு பொது வேட்பாளரை  நிறுத்துவது. ஆனால், தேர்தலைப் பகிஸ்கரிக்கும் முடிவுக்குப் பெருமளவு ஆதரவு இல்லாத நிலையில்  சிவில் சமூகப் பிரதிநிதிகளால் பொது வேட்பாளரை முன்னிறுத்தும்  முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன.

பொதுவேட்பாளர் என்ற விடயத்தை முன்கூட்டியே முன்னெடுத்திருக்க வேண்டிய  எமது தமிழ்த் தலைவர்கள் சிவில் சமூகம்  அதை முன்னெடுத்தபோது காலங்கடந்து போய்விட்டது என்று நிராகரித்துவிட்டு ஒட்டுமொத்தத் தமிழ் வாக்குகளையும் சஜித் பிரேமதாசா அவர்களுக்குத்  திரளாகக் கிடைக்கச் செய்தார்கள்.

 இவர்கள் தென்னிலங்கையின்  அரசியல்  கள நிலவரங்களைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டார்கள்.   தென்னிலங்கையில்  சிங்கள மக்கள் தங்கள் இனம் சார்ந்து முடிவெடுத்து,  ஒரே தேசமாகத்  திரண்டு கோத்தபாயா அவர்களைப் பெரு வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

விடுதலைப்புலிகளின் காலம்வரை  தமிழ்மக்களின்  பேரம் பேசும் சக்தியாக  அவர்கள் இருந்தார்கள்.  இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பவர்களாகத் தமிழ் தரப்பு இருந்தது.  ஆனால், இன்று தமிழ்த் தலைவர்களின் தவறான அனுகுமுறைகளால் தமிழ்மக்களின்  ஆதரவு இல்லாமலேயே  ஜனாதிபதி ஒருவர்  தெரிவாக  முடியும்  என்ற நிலைமை ஏற்பட்டு, தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

எமது தலைவர்கள் தீர்க்கதரிசனம் மிக்கவர்களாக இருந்திருந்தால், இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இருக்க முடியும.; சிங்கள கட்சி ஒன்றுக்குக் குவித்த வாக்குகளை தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவருக்கு வழங்கி நாங்கள் தனியான ஒரு தேசம் என்பதை நிரூபித்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post