இலங்கையில் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு அமைச்சர் யார்? தற்போது சட்ட ஆட்சி நடைபெறவில்லையா? - வாழ்வுரிமை இயக்க தலைவர் சிவகரன் கேள்வி
ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டின் பல்வேறு விதமான சனநாயக விரோத நகர்வுகள் நிகழ்கின்றன. நீண்ட காலமாக யுத்தத்தின் பிடிக்குள் அகப்பட்டிருந்த மக்களை மீண்டும் அச்சமூட்டும் சூழலுக்குள் இட்டுச் செல்வதாகவே உணர்கின்றோம் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும்
புதிய ஜனாதிபதி பதவி ஏற்று ஒரு மாதம் ஆகின்றது. நாட்டில் பாதுகாப்பு மற்றும் சட்டம்இ ஒழுங்கு அமைச்சர் நியமிக்கப்படவில்லை. அமைச்சர்களுக்கான துறைகள் இன்னும் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை.
பத்தொன்பதாவது திருத்தத்தின் பிரகாரம் சனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது என கூறப்படுகின்றது.
அப்படியாயின் இந்த நாட்டில் தற்போது சட்ட ஆட்சி நடைபெறவில்லையா? சனநாயக ஆட்சி அதிகாரத்தின் முதுகெலும்பு அரசியலமைப்பு அதை மீறுவது சட்ட ஆட்சித் தத்துவத்திற்கு சாவுமணியடிக்கும் சனநாயகப் படுகொலை அல்லவா?
ரணிலுக்காக பத்தொன்பதாவது திருத்தத்தை மேற்கொண்டதில் பிரதானமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ண எம்.எ.சுமந்திரன் ஆகியோர் அமைதியாக இருப்பதும் வேடிக்கையானதே!
ஒக்டோபர் புரட்சியின் போது இலங்கையின் சனநாயகத்தை பாதுகாக்க போகின்றோம் என நீதிமன்றம் சென்ற சட்டத்தரணிகளும் சிவில் அமைப்புக்களும் அமைதி கொள்வதன் சூழ்ச்சி என்ன?
நாட்டின் இறைமையை பாதுகாப்பதே அரசியல் அமைப்புதானே! அதை கேள்விக்குட்படுத்த முடியுமா? எதிர்கட்சிகளும் சிங்கள முற்போக்குவாதிகளும் கல்வியியலாளர்களும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பதே புரியாத புதிராக உள்ளது.
இராணுவ பிரசன்னத்தை நோக்கி சனநாயக ஆட்சிமுறை நகர்த்தப்படுகின்றதா? எனும் ஐயம் எழுகின்றது.
இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச நியமன விதி முறைகளை மீறி அரச புலனாய்வுத்துறைக்கு பணிப்பாளராக இராணுவ பிரிகேடியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் பல துறைகளுக்கு இராணுவம் நியமிக்கப்படவுள்ளதாக அறிகின்றோம்.
அரச அலுவலகங்களுக்குச் சென்று இராணுவம் அரசியல்வாதிகளின் படங்களை வலுக்கட்டாயமாக அகற்றுகின்றது.
தமிழர் தாயகமெங்கும் இரானுவம் காவலரண்களையும்இ வீதி சோதனைச் சாவடிகளையும் அமைந்துள்ளது. சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் உட்பட இவை எல்லாம் இராணுவ மயமாக்கலையே காட்டுகின்றன.
இந்த நாட்டில் அரசியல் அமைப்பின் அடிப்படையில் சனநாயகத்தின் பிரகாரம் சட்ட ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் வேண்டுகையும் ஆகும்.
ஆட்சியாளர்கள் சனநாயகத்தை நசுக்காமல் வலுக்குன்றாத சாமானிய தனி மனித வாழ்வுரிமை இருப்பை நிலை நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
இவ்விடயத்தில் மனித உரிமை ஆர்வலர்களும் சிவில் அமைப்புக்களும் கரிசனை கொள்ள வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment