சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு - சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகிறது
சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்ற தீவகத்தின் மண்கும்பான் பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடி விஐயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இவ்வாறு தீவகம் உட்பட வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை தாம் எடுக்க உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழித்தட அனுமதியை ஐனாதிபதி இரத்துச் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் அதே போன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
சட்டவிரோத மணல் அகழ்வினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் பொது மக்கள் உட்பட பல தரப்பினர்களும் தொடர்சிசியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் தொடர்ந்தும் சட்டவிரோத மணற்கொள்ளையில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணம் தீவகத்தில் உழவு இயந்திரங்களும் தியிட்டு எரிக்கப்பட்டிருந்தன. அதே போன்று வடமராட்சி கிழக்கிலும் அம் மக்கள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் கிளிநொச்சியில் வீதியை மறித்து மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்விற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தடுக்க வேண்டுமெனவும் கோரி வருகின்றதுடன் பல தரப்பினர்களிடமும் இது தொடர்பில் முறையிட்டும் இருக்கின்றனர். இதற்கமைய தீவகத்தின் மண்கும்பான் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கூட்டமைப்பினருக்கு மக்கள் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் இன்று அப்பகுதிக்கு நேரடி கள விஐயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்ற பிரதேசங்களை பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். இக் கலந்துரையாடலின் போது சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை தாம் எடுப்பதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
Post a Comment