தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்விற்கு இந்தியா உதவ வேண்டும் - கூட்டமைப்பு கோரிக்கை - Yarl Voice தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்விற்கு இந்தியா உதவ வேண்டும் - கூட்டமைப்பு கோரிக்கை - Yarl Voice

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்விற்கு இந்தியா உதவ வேண்டும் - கூட்டமைப்பு கோரிக்கை


தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வைக் காணுவதற்கு இந்தியாவினுடைய பங்களிப்பு அவசியமெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அத்தகைய உதவியை இந்தியா செய்யுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உதவியினால் தான் 13 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த வேளையிலே கூட 13 ஆம் திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக பூர்த்தி செய்யவில்லை என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்லியிருந்தோம்.

அதனால் தேர்தலிலும் நாங்கள் போட்டியிடாமல் இருந்ததந்கான காரணமும் அது தான். இந்தியா அந்த நிலைப்பாட்டை முழுமையாக ஏற்றிருக்கிறது. ஆனபடியினால் தான் இந்திய நிலைப்பாடு எப்பொழுதுமே 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவது மட்டுமல்ல ஒரு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை செயற்படுத்த வேண்டுமென்பதாக இருந்திருக்கிறது.

இதனடிப்படையிலையே முதலாவது சந்திப்பின் போது இந்திய நிலைப்பாடு என்ன என்பது சம்மந்தமாக இந்தியப் பிரதமரினாலே இலங்கை ஐனாதிபதிக்கு தெட்டத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் ஐனாதிபதியை இந்தியாவிற்கு வரவழைப்பதற்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக கொழும்பிற்கு வந்த இந்திய வெளிவிவகார தரப்பினரும் கூட அந்த கருத்தைச் சொல்லியதாக உத்தியோகபூர்வமாக இந்தியா அறிவித்திருக்கிறது.

ஆகவே இந்திய நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். தொடர்ச்சியாக இந்தியா அந்தவிதத்திலே உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கிடையிலான ஒரு சர்வதேச ஒப்பந்தமாக இந்திய இலங்கை ஒப்பந்தம் இருக்கிறது.

அதனடிப்படையிலே இந்தப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு இந்தியாவினுடைய பங்களிப்பு அத்தியவசியமான ஒன்றாக இருக்கின்றது. அதனை இந்தியா செய்யுமென்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post