நியூஸிலாந்து அணிக்கு கிடைத்த சிறப்பு விருது
இங்கிலாந்தில் நடப்பு ஆண்டு நடைபெற்று முடிந்த 50 ஓவர்கள் கொண்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்தாலும் பல கோடி இரசிகர்களின் மனதை வென்ற நியூஸிலாந்து அணிக்கு மகத்தான விருதொன்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான மகுடத்திற்கான இறுதிப் போட்டியில் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் சம்பியன் கிண்ணத்தை இழந்தாலும் எவ்வித குழப்பமும் இன்றி நடந்துக் கொண்ட நியூஸிலாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இவ்வாண்டின் கிரிக்கெட்டின் மன உறுதி (ஸ்பிரிட் ஒப் கிரிக்கெட்) எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் மேரில்போன் கிரிக்கெட் கழகம் வழங்கி கௌரவித்துள்ளது.
இதுகுறித்து மேரில்போன் கிரிக்கெட் கழக தலைவர் குமார் சங்கக்கார கூறுகையில் 'உலகக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் விளையாட்டுத்திறன் பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவை வெளிப்பட்டது. நியூஸிலாந்து அணியின் வீரர்கள் இவ்விருதிற்கு தகுதியானவர்கள்' என கூறினார்.
உலகக்கிண்ண வரலாற்றில் முதல்முறையாக உலகக்கிண்ணத்திற்கு முத்தமிடும் ஆர்வத்தில் 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இன்னிங்சில் சில குளறுபடிகள் நடந்தது. கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓட்டமெடுக்க ஓடிய போது நியூஸிலாந்து அணி வீரர் விக்கெட்டை நோக்கி பந்தை எறிந்தார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக ஸ்டோக்ஸின் துடுப்பாட்ட மட்டையில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இதற்கு ஓட்டமெதுவும் கொடுக்க வேண்டுமா என்ற நிலையில் நடுவர் குமார் தர்மசேன ஓட்டங்களுடன் பவுண்டரியும் கொடுத்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணியும் 241 ஓட்டங்;கள் எடுக்க போட்டி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து சுப்பர் ஓவர் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்ட்கள் எடுத்தது. இதையடுத்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியும் ஒரு ஓவரில் 15 ஓட்டங்களே எடுக்க மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இரு அணிகளுக்கும் சம்பியன் கிண்ணம் பகிர்ந்தளிக்கப்படும் என அனைவரும் எண்ணிய நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்துள்ளதாக கூறி இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணம் வழங்கப்பட்டது.
இது நியூசிலாந்து அணியினருக்கு மட்டுமன்றி கிரிக்கெட் இரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இறுதி வரை மன உறுதியுடன் முழுத்திறமையை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணிக்கே சம்பியன் கிண்ண கிடைத்திருக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.
ஆனால்இ நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சனும் மற்ற வீரர்களும் இரண்டாம் இடத்தை எவ்வித மனக்கலக்கமுமின்றி ஏற்றுக்கொண்டனர்.
இந்த போட்டிக்கு பிறகு பென் ஸ்டோக்சும் போட்டியின் நடுவர் குமார் தர்மசேனவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இதில் துடுப்பாட்ட மட்டையை குறுக்கே வைத்தது எதிர்பாராத விதமாக நடந்தது அதற்காக நியூஸிலாந்து அணியிடம் மன்னிப்பு கேட்கிறேன் என நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
ஆனால்இ தான் வழங்கிய முடிவுக்காக ஒருபோதும் வருத்தமடையப் போவதில்லை என இலங்கையைச் சேர்ந்தஇ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நடுவர் குமார் தர்மசேன தெரிவித்தார்.
Post a Comment