புதிய பரிமாணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பயணம் ஆரம்பம்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக அரசியலுக்கு வரக்கூறி வற்புறுத்தி வந்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு மீண்டும் ரஜினியின் அரசியல் நுழைவு பற்றி பேச்சு எழுந்தது. 25 ஆண்டுக்கும் மேற்பட்ட காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்தார்.
தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார்.
அதன்பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.
கட்சி தொடங்கவில்லை என்றாலும் ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி மற்ற கட்சியினரிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக குடிநீர் பிரச்சினையில் அவரது மக்கள் மன்றத்தினரின் பணிகளும் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முழுமையாக கடந்த நிலையில் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் இந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் பரபரப்புகளை ஏற்படுத்தியே வருகிறார்.
2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பிலேயே சிஸ்டம் சரியில்லை என்று அரசியலை குறை சொன்னார். தான் அரசியலுக்கு வந்தால் அது ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று சொன்னவர் ரசிகர்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதையும் அறிவித்தார்.
அதன் பின்னர் ஸ்டெர்லைட் போராட்டம் ராஜீவ் கொலையாளிகள் போன்ற விஷயங்களில் ரஜினி சொன்ன கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மோடிக்கு ஆதரவாக ரஜினி கொடுத்த பேட்டிகளும் பரபரப்பானது.
பா.ஜனதா தலைவர்கள் சிலர் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக பார்த்ததாலும் மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேட்டிகள் அளித்ததாலும் அவர்மீது பா.ஜனதா ஆதரவாளர் என்ற பிம்பம் விழுந்தது. ரஜினி இதையும் சமீபத்திய பேட்டியில் உடைத்தார். தன் மீது காவி சாயம் பூச முயற்சிகள் நடப்பதாக பரபரப்பாக கூறினார்.
ரஜினி கட்சி தொடங்கினால் யாருடன் கூட்டணி சேர்வார் என்ற கேள்வி எழுந்தது. பா.ஜனதாவுடன் கூட்டணி சேரமாட்டார் என்பது அவரது பேட்டி மூலமே உறுதியான நிலையில் கமலுடன் கூட்டணி சேர்வாரா என்ற யூகங்கள் எழுந்தன. கமல்ஹாசன் நடிக்க வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று சென்னையில் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்ற பாராட்டு விழா ஒன்று நடை பெற்றது.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் கமல்ஹாசனை பாராட்டிப் பேசியதோடு அரசியல் தொடர்பாகவும் சில கருத்துகளை முன் வைத்தார். 'எங்கள் இருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்'' என்றும் குறிப்பிட்டார். ரஜினியும் கமலும் இணைவார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் தற்போது ரஜினியுடன் காங்கிரஸ் கூட்டணி சேரலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:-
இந்த உள்ளாட்சி தேர்தல் பங்கீடு விஷயத்தில் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் பல்வேறு மனக்கசப்புகள் உருவாகிவிட்டன. அதே நேரத்தில் ரஜினியை நம்பி பயன் இல்லை என்ற முடிவுக்கு பா.ஜனதாவும் வந்துவிட்டது. கடந்த ஆண்டு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி கூட இந்த ஆண்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
Post a Comment