இந்தியாவில் இருக்கின்ற ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு வர வேண்டும், அவர்களுக்கு அரசு உதவிகள் வழங்க வேண்டும் - சுமந்திரன்
இந்தியாவிலே இருக்கின்றவர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து குடியமர வேண்டும். அவர்களுக்கான சதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமென்பதே தங்களது நிலைப்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலே நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதைக் குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அது இந்தியா தன்னுடைய நாட்டு நலன்களின் அடிப்படையிலே உருவாக்குகிற சட்டங்கள் என்பதால் அதைப்பற்றி பேசவில்லை.
இலங்கையில் இருந்து அகதிகளாக வாழ்கிறவர்களைக் குறித்து எங்களுடைய நிலைப்பாடு அவர்கள் மீண்டும் எங்களுடைய நாட்டிற்குத் திரும்பி வர வேண்டும் என்பது தான். ஆனால் இந்தியாவிலே தொடர்ந்து தங்கியிருப்பதற்கான விருப்பம் அவர்களுக்கு இருக்குமாக இருந்தால் சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அதனைத் தெரிவு செய்வதற்கான சுயாதினம் இருக்கிறது.
அந்த நாட்டு சட்டம் அதற்கு இடங் கொடுக்குமாக இருந்தால் அவர்கள் அதனைத் தெரிவு செய்யலாம். ஆனால் எங்களுடைய விருப்பம் என்னவென்று கேட்பீர்களாக இருந்தால் அவர்கள் அனைவரும் இலங்கையர்கள். எங்களுடைய மக்கள், இந்த நாட்டிலே இருந்த துரத்தப்பட்டவர்கள், மீண்டும் இங்கே வந்து வாழ்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் வர வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பமாக இருக்கின்றது.
அதே நேரத்தில் இதுவரையில் வந்து குடியேறியவர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற அந்தக் குறைபாடு இருக்கிறது தான். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் ஆதரவாகச் செயற்பட்ட அரசாங்கம் கூட முழுமையாக அதனைச் செய்திருக்கவில்லை. அதற்கான பல முயற்சிகளை நாங்கள் தொடர்ந்தும் எடுத்திருந்தோம்.
ஆகவே வருகிற நாட்களிலேயும் அவர்கள் நாடு திரும்புவதற்கும் திரும்பி வருகிறவர்களுக்கு வாழ்வதற்கான இடங்கள் கொடுப்பது மட்டுமல்ல அவர்கள் வாழ்வாதாரம் சம்மந்தமாக வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துவோம்.
இது வாக்கு வங்கி சம்மந்தமான ஒரு விடயமே அல்ல. எங்களுடைய வாக்கு வங்கி அதிகரிக்க வேண்டுமென்பதற்காக நாங்கள் எடுக்கிற நிலைப்பாடு அல்ல இது. இது அவர்களுடைய அடிப்படை உரித்து. அவர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். இங்கே இருந்த சூழ்நிலை காரணமாக அவர்கள் தப்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை அந்த வேளையில் இருந்தாலும் கூட அவர்கள் திரும்ப வர வேண்டும். அந்த அடிப்படைய உரித்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.
Post a Comment