சிரிய நாட்டு அகதிகளை எங்களால் சுமக்க முடியாது - துருக்கி அதிபர்
சிரிய அகதிகளின் புதிய அலையை எங்கள் நாட்டால் சுமக்க முடியாது என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்தான்புல்லில் செய்தியாளர் சந்திப்பில் எர்டோகன் கூறியதாவது:
''சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியை நோக்கி வந்திருக்கிறார்கள். இதில் சிரியாவின் வடக்கில் இட்லிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 80இ000 பேர் துருக்கி எல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
சிரிய அகதிகளின் இந்தப் புதிய அலையை துருக்கியால் மட்டும் தனியாகச் சுமக்க முடியாது. இட்லிப் பகுதியில் வன்முறையைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் தாக்கம் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உணரப்படும்''.
இவ்வாறு எர்டோகன் தெரிவித்தார்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் சிரிய அகதிகளைக் குடியமர்த்துவது தொடர்பான தனது முடிவுக்கு ஆதரவு அளிக்காத இஸ்லாமிய நாடுகளையும் எர்டோகன் முன்னரே விமர்சித்திருந்தார்.
துருக்கியில் தற்போதைய நிலவரப்படி சுமார் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் உள்ளனர். உலகிலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடாக துருக்கி அறியப்படுகிறது.
முன்னதாகஇ துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள்
படைகளைத் திரும்பப் பெற்றன. இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
Post a Comment