வட மாகாண சுகாதார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து - Yarl Voice வட மாகாண சுகாதார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து - Yarl Voice

வட மாகாண சுகாதார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வடமாகாணத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் அனைவரின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் இருப்பவர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புமாறு வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும்

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் 51 வீதமானவர்கள் யாழ். மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். தற்போது சீரற்ற மழை காரணமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதுவரை வடமாகாணத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரதேசங்களில் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தற்போது டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வட மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் பல்வேறு பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதுடன் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் இதன்போது பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சென்றிருக்கின்றார்.

குறிப்பாக மாவட்டத்தில் இருக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் வளங்கள் மிக குறைவாக இருப்பதனால் ஏனைய மாவட்டங்களில் இருந்து வளவாளர்கள் மற்றும் பரிசோதனை ஆய்வாளர்களை இங்கு கொண்டுவந்து அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் நாங்கள் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

வட மாகாணத்தில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களின் விடுமுறையும் இன்று முதல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை பெற்றவர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுகின்றது. அவர்கள் உடனடியாக கடமைக்கு வருமாறு நாங்கள் அழைக்கின்றோம். 24 மணி நேரம் சேவை செய்து டெங்கு நோயை கட்டுப்படுத்த நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம்இ என்று குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post