கடும் திண்டாட்டத்தில் ராஜித சேனாரத்ன
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (23) மூன்றாவது முறையாக முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் முன் பிணை கோரி மனு ஒன்றை கடந்த 19ஆம் திகதி ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்தார்.
குறித்த பிணை மனு மீதான விசாரணையின் பின்னர் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதனையடுத்து அன்று மாலை மீண்டும் பிணை கோரி ராஜித சேனாரத்ன மனுத்தாக்கல் செய்தார்.
அதனையடுத்து முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (23) காலை வருகைதந்தார்.
இதன்போது அவரது இரண்டாவது முன்பிணை மனு ஆராயப்பட்டதுடன் அது நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்தே ராஜித சேனாரத்ன மீண்டும் மூன்றாவது முறையாக முன்பிணை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு பொலிஸார் தயாராகி வருவதாக தனது முன்பிணை மனுவில் ராஜித குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக தன்னை கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் அவ்வாறு கைது செய்வதற்கு முன்னர் தன்னை முன்பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment