மாநகர சபையில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார் - றெமீடியஸ் - Yarl Voice மாநகர சபையில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார் - றெமீடியஸ் - Yarl Voice

மாநகர சபையில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார் - றெமீடியஸ்

யாழ்.ஊடக அமையத்தில்  இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.மாநகர சபையில் ஏற்பட்ட குழப்பமான நிலை உருவாக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டமைக்காக நான் பகிரங்கமான மன்னிப்பு கோருகின்றேன். குறிப்பிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் தர்சானந் எப்போதும் துறைசார்ந்தவர்களையும் தொழிலை பற்றி தேவையற்ற விதத்தில் பேசுவரை வழக்கமாக கொண்டுள்ளார்.

மாநகர சபையின் கூட்ட பதிவுகளை எடுத்து பார்த்தால் அது எல்லோருக்கும் தெரியும். குறித்த கூட்டமைப்பின் உறுப்பினர் முகநூலில் போட்ட தேவையற்ற அல்லது சக உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் பதிவு பற்றி முதல்வருக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.

முதல்வர் குறித்த கூட்டமைப்பின் உறுப்பினரை அழைத்து விசாரித்த பின்னும் முகநூல் பதிவு நீக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்றைய (நேற்று முன்தினம்) அமர்வில் மீண்டும் கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந் குலத்தை அதாவது சாதியை இழுத்து பேசிய விடயம் கண்டிக்கப்பட வேண்டியது.

கூட்டமைப்பினருக்கு தேர்தல் காலத்தில் மட்டும் தமிழீழு விடுலைப் புலிகளின் தலைவரை புகழ்ந்து மதிப்பு கொடுப்பதாக காட்டிக் கொண்டு தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள்.
ஆனால் பின்னர் புலிகளின் தலைவரின் வட்டத்தில் உள்ள குலத்தை இழிவு படுத்தி பேசி தரக்குறைவாக நடந்து கொள்வார்கள்.

அந்த பேச்சு மோதலின் போது நானும் ஆவேசப்பட்டேன். இல்லை என்று நான் சொல்லவில்லை. என்னை பொறுத்தமட்டில் அந்த சந்தர்ப்பத்தில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகும். என்னை பொறுத்தவரையில் கடவுளுக்கு மேலாக தாய் தந்தையை பார்க்கின்றேன்.

அடுத்தது என்னுடைய தந்தையின் தொழில் மற்றும் அதன் வர்க்கத்தினர். நான் இன்று சட்டத்தரணியாக இருக்கின்றேன் என்றால் நான் ஆகாயத்தில் இருந்து சட்டத்தரணியாக வரவில்லை. எனது தந்தை பிடித்த ஒவ்வொரு மீனும்தான் என்னை சட்டத்தரணியாக்கியது.

அந்த விடயத்தை இழிவு படுத்தினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல என்னுடைய சட்டத்தரணி தொழிலை மிகவும் இழிவுபடுத்தி அந்த கூட்டமைப்பின் உறுப்பினர் பேசியிருந்தார்.
மேல் நீதிமன்றத்தில் ஹேரோயின் வழக்கினை நான் செய்யவில்லை.

அவ்வாறு செய்ததை உறுதிப்படுத்தினால் என் தொழிலை விட்டுச் செல்வேன். நான் சட்டத்தரணியாக முதல் 11 வருடங்கள் யாரிடமும் பணம் வாங்காமல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களையும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டவர்களையும் வாதாடி விடுவித்தேன். யுத்தகாலத்திலும் இவ்வாறான வழக்குகளை எடுத்து செய்தேன். இதனை நான் கர்வத்துடன் சொல்வேன்.

தமிழ் தேசியம் என்று இன்றுவரை பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் மக்களின் உள்ளத்தில் இல்லாத சாதி வேற்றுமை பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேசியம் என்பது ஒரு குலாம் ஒரு குடும்பம். அந்த தேசியத்தில் இவ்வாறான வேறுபாடு இருக்க முடியாது.

அனைவரும் தமிழர் என்று சொல்வதுதான் தேசியம். பொறுக்க முடியாத அல்லது இயலாத நேரத்தில் சாதி வேற்றுமை பேசுவது தகுந்தது இல்லை. இனிவருமம் காலங்களிலும் இவ்வாறான சாதி வேற்றுமை பார்ப்பவர்கள் ஓரம்கட்டப்பட வேண்டும். அவர் சார்ந்த கட்சி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post