கன்னியா வெண்ணீரூற்று பௌத்த மயமாக்கலுக்கு எதிரான வழக்கில் சட்டத்தரணி சுமந்திரன், சயந்தன்
கன்னியாய் வென்னீரூற்று பௌத்த மயமாக்கலுக்கு எதிரான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று காலை எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது திருகோணமலை வெல்கம் விகாரையின் விகாராதிபதி குறித்த வழக்கில் தன்னையும் இடைபுகு மனுதாரராக இணைத்துக்கொள்ளுமாறு தனது சட்டத்தரணிகளூடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.
குறித்த விண்ணப்பத்திற்கு மனுதாரர் தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததுடன் குறித்த வழக்கில் வெல்கம் விகாரையின் விகாராதிபதி ஒரு அவசியமான தரப்பே அல்ல என்றும் தனது வாதத்தை முன்வைத்தார்.
இதேவேளை எதிர்மனுதார்களான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசஅதிபர் சார்பில் ஆஜராகிய சட்டமா அதிபர் திணைக்கள அரசசட்டவாதி விகாராதிபதி வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த தடவை இந்த வழக்கு எடுததுக்கொள்ளப்பட்ட போது எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய பிரதிமன்றாடியார் அதிபதி அவ்விதம் விகாராதிபதி சேர்த்துக்கொள்ளப்படுவதனை ஆட்சேபித்து இருந்தார்.
தற்பொழுது சட்டமாஅதிபர் திணைக்களம் தனது நிலைப்பாட்டை திடீரென்று மாற்றிக்கொண்டது ஔித்துப்பிடித்து விளையாடுவது போல் உள்ளது என்றும் அரசதரப்பை கடுமையாக சாடினார்.
மூன்று தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் எழுத்துமூல சமர்ப்பணங்களை பெப்ரவரி 10 ம் திகதிக்கு முன்னதாக வழங்குமாறு உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.
குறித்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி பிரசாந்தினியின் அறிவுறுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
Post a Comment