பொய் உரைப்பது சுமந்திரனுக்கு கரும்பு சாப்பிடுவது போல - மாற்று அணி சதியல்ல தமிழ் மக்களின் கதி என்கிறார் அருந்தவபாலன் - Yarl Voice பொய் உரைப்பது சுமந்திரனுக்கு கரும்பு சாப்பிடுவது போல - மாற்று அணி சதியல்ல தமிழ் மக்களின் கதி என்கிறார் அருந்தவபாலன் - Yarl Voice

பொய் உரைப்பது சுமந்திரனுக்கு கரும்பு சாப்பிடுவது போல - மாற்று அணி சதியல்ல தமிழ் மக்களின் கதி என்கிறார் அருந்தவபாலன்


தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் கந்தையா அருந்தவபாலன் யாழ் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இதன் போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார். அங்கு அவர் தெரிவித்ததாவது..

மாற்று அணி உருவாக்க நிலைமைகள் 

மாற்று அணிக்கான செயற்பாடுகளை நாங்கள் சரியான வகையில் மேற்கொண்டு இருக்கின்றோம். பொங்கலையடுத்து அந்த அணியினுடைய அறிவிப்பும் ஊடக சந்திப்பும் மேற்கொள்வதாக உத்தேசியக்கப்பட்டு இருந்தது என்பது உண்மை. எனினும் அண்மையில் எங்களுடைய அணியில் சேர விரும்பிய கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பாக இன்னும் நாங்கள் கலந்துரையாட வேண்டி இருப்பதால் அதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது.

அதாவது புரிந்துரண்வு உடன்படிக்கை தொடர்பாக அதில் ஒரு சில கட்சிகளுக்கு சில அதிருப்தி இருப்பதையும் நாங்கள் உணர்கிறோம். ஆகையினால் அந்தக் கட்சிகள் தங்களுடைய செயற்குழுவைக் கூட்டி அது தொடர்பாக தீர்மானங்களை எடுத்து அறிவிப்பதாக எங்களுக்கு கூறியிருக்கின்றார்கள்.

அவ்வாறான அறிவிப்புக்கள் விரைவில் வருமென்று நாங்கள் கருதுகின்றோம். அந்தக் கட்சிகளின் செயற்குழு முடிவுகள் எங்களுடைய புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாக கிடைத்தவுடன் அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையும் அந்தக் கூட்டுத் தொடர்பான ஊடக மாநாடும் விரையில் நடக்குமென்று குறிப்பிடுகிறேன்.

மாற்று அணி என்பது சதி என சுமந்திரன் கூறிய கருத்து

மாற்று அணி என்பது தமிழ் மக்களுக்கான சதி என்று கூறுவதையெல்லாம் முற்றாக நிராகரிக்கின்றோம். உண்மையில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்று அணி தான் தமிழ் மக்களுக்கான கதியாக இருக்கின்றது.

சென்ற காலத்தில் மக்களிடம் வாக்குகளைப் பெற்று மக்களின் பிரதிநிதிகளாக தாங்களே இருப்பவர்களாக சொல்லிக் கொண்டு அங்கே நல்லாட்சிக்கு முண்டு கொடுத்து கடைசியில் எம் மக்களை நட்டாற்றில் விட்டிருக்கின்றார்கள்.

தங்கள் சுயநல அரசியலின் ஊடாக தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் வளர்ந்ததே ஒழிய மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் அவர்கள் ஒற்றுமையைப் பற்றியும் மாற்று அணி சதி என்றும் சொல்வதெல்லாம் மீண்டும் அவர்கள் பதவிக்கு வருவதற்கும் தங்களுடைய சுயநல அரசியலைக் கொண்ட செல்வதற்குமேயாகும்.

இன்று தமிழ் மக்களுக்கு அவர்களுடைய அரசியல் உரிமைகள் அவர்களுடைய வாழ்வின் இருப்பு என்பவற்றை பேணுவதற்கு கொள்கை வழி செல்கின்ற ஒரு நல்ல மாற்றுத் தலைமைத்துவமும் மாற்று அணியும் தேவைப்படுகின்றது. எனவே அது நிச்சயமாக வரும். அதன் கீழ் மக்கள் ஒன்றுதிரண்டு சரியான பாதையை தெரிவு செய்வார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

மாற்று அணியல்ல மாட்டு அணியென சுமந்திரன் குறிப்பிட்ட விடயம்

நிச்சயமாக எங்களுடைய அணியை ஒரு மாட்டு அணியென்று கNஐந்திரகுமார் அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்று நாங்கள் திடமாகவே நம்புகின்றோம். அவ்வாறு கூறக் கூடியவரும் அவர் அல்ல. ஆனாலும் அவ்வாறு அவர் கூறியதது தொடர்பான செய்திகளையும் நாங்கள் பார்க்கவில்லை.

ஆனால் நிச்சயமாக சுமந்திரன் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பார். அவருக்கு பொய் கூறுவது மிக இலகுவான விடயம். அதாவது கரும்பு சாப்பிடுவது போல பொய்களை இலகுவில் சொல்லுவார். அவ்வாறு அவர் பல பொய்களையும் சொல்லியும் இருக்கின்றார்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு வராவிட்டால் தான் தன்னுடைய பதவியை இராஐpனாமா செய்வேன் என்று கூறியிருந்தவர் இன்றுவரை அதைப்பற்றி சிந்திக்கவும் இல்லை. கூறவும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவர் தன்னுடைய தேவைக்காக பல பொய்களையும் புரட்டுக்களையும் விடுபவர் என்பது எங்களுடைய மக்களும் அறிந்ததே.

அந்த வகையில் தான் அவர் எங்கள் அணியை மாட்டு அணியென மற்றவர் கூறியதாக அவரே தான் நிச்சயமாக கூறியிருப்பார். ஒரு வகையில் நீங்கள் பார்த்தீர்களானால் தமிழ் மக்கள் கூட்டணி தமக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்று அவர் சொல்கின்ற அதே வேளையில் அதற்கு எதிரான அல்லது அதை விமரச்னம் செய்கின்ற கருத்துக்களைத் தான் கூடுதலாக சொல்லி வருகின்றார் என்றால் அதன் கருத்து எங்கள் மாற்று அணியையிட்டு அவர் சரியாகப் பயப்பிடுகின்றார் என்பது தான் அதன் கருத்தாகும்.

 துரைராஐசிங்கத்தின் பொங்கல் பானை குறித்தான கருத்து

அண்மையில் மட்டங்களப்பில் தமிழரசுக் கட்சியினுடைய பொங்கல் விழாவில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் பொங்கல் பானை இருந்து என்ன பிரயோசனம் உள்ளீடுகள் எல்லாம் தங்கள் வீட்டிற்குள் தான் இருக்கிறன்றது என்று ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்.

நிச்சயமாக உள்ளீடுகளின் அளவை வைத்து உள்ளீடுகளின் தரத்தை வைத்து தான் நாங்கள் பானையை தெரீவு செய்கின்றோம். எனவே அந்த அடிப்படை அறிவு கூட தமிழரசுக் கட்சி செயலாளருக்கு தெரியாமல் இருக்கின்றது போல உள்ளது.

ஆக அவர் கூறுவது போல் அங்கே வீட்டுக்குள் இருப்பது தரமான உள்ளீடுகள் அல்ல. அங்கே உமிகளும் பயிற்றுக் கோதுகளும் கச்சான் கோதுகளும் தான் அதிகம் காணப்படுகின்றது. அதனை நிச்சயமாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தரமான உள்ளீடுகளும் அதனை தமிழ் மக்களுக்காக பொங்கிப் படைப்பதற்கான பானையும் எங்களிடம் தான் இருக்கின்றது என்பதை நாங்கள் அவருக்கு உறுதியாகக் கூறி வைக்க விரும்புகின்றோம்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரான கூட்டமைப்பின் மாற்றம்

அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பிரதிநிதிகள் பல்வேறு வகையில் இந்த அரசாங்கத்தை விமர்சிக்கின்ற தன்மை காணப்படுகின்றது. குறிப்பாக போர்க் குற்றவாளிகளுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுகின்றது என்று ஒரு சிலர் கூறுகின்றார்கள்.

உண்மையில் நல்லாட்சிக் காலத்தில் இவர்கள் முண்டு கொடுத்த இவர்கள் ஆதரவு கொடுத்த அந்த ஆட்சிக் காலத்தில் போர்க் குற்றவாளிகளுக்கு உயர் பதவிகள் வழங்கப்படவில்லையா? சாதாரணமாக ஒரு பிரதேச செயலாளர் அல்லது அரசாங்க அதிபரைக் கூட நியமிக்க முடியாத நிலைமையில் இருந்தனர்.

குறிப்பாக கல்முனை பிரதேச செயலக விடயத்தில் கூட மக்களை ஏமாற்றியவர்கள் இன்று ஏதோ புதிதாக போர்க் குற்றவாளிகளுக்கு பதவி கொடுப்பது போல கூற வெளிக்கிட்டிருக்கின்றனர்.

சென்ற நல்லாட்சிக் காலத்தில் உரிமைகள் பற்றி சொல்வதற்கு வாய் எடுக்காதவர்கள் இன்று உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றார்களாம். அபிவிருத்திக்கு முதல் உரிமையே முக்கியமானது என்றும் கூறுகின்றார்கள்.

ஆனால் எங்கள் கட்சியின் செயலாளர் நாயகம் அபிவிருத்திக்கு முதல் அதனை அடைவதற்கான அதிகாரம் தேவை என்று சொன்ன போது அதனை எள்ளி நகையாடிய அதே வாய்கள் இன்று அபிவிருத்திக்கு முன்னர் அதிகாரம் உரிமைகள் அவசியம் என்று சொல்வதை நாங்கள் பார்க்கின்றோம்.

கூட்டமைப்பு கூறுகின்ற ஒற்றுமை

இதே போலத் தான் ஒற்றுமை முக்கியமென்று கத்துகின்றார்கள். ஆனால் இன்று அந்தக் கட்சிக்குள்ளே கூட ஒற்றுமையைப் பேண முடியாதவர்களாக கொத்திக் கலைப்பவர்களாக இருப்பதையும் நாங்கள் பார்க்கின்றோம்.
இவ்வாறு; தான் தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எங்களுடைய மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பமாக இருக்கின்றது.

விமல் வீரவன்சவின் பெயர்ர்ப் பலகை மாற்றம்

அண்மையில் மன்னாரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அங்கே பெயர்ப்பலகை தமிழில் இருந்து சிங்களத்திற்கு மாற்றப்பட்டதை நாங்கள் அவதானிக்கின்றோம். பொதுவாகவே வடக்கு பிரதேசத்தில் அல்லது தமிழ்ப் பகுதிகளில் தமிழிற்கே முன்னுரிமை கொடுக்கின்ற ஒரு செயற்பாடே இருந்து வந்தது.

அவ்வாறான ஒரு நிலையில் தான் அந்தப் பெயர்ப்பலகை உருவாக்கப்பட்டிருந்தது. அதைச் சகிக்க முடியாத விமல் வீரவன்ச உடனடியாகவே அதை மாற்றுமாறு பணித்து அடுத்த நாளே அது சிங்களமாக மாற்றப்பட்டது. உண்மையில் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் வருத்தமளிக்கின்ற நிகழ்வாகவே உள்ளது.

குறிப்பாக இங்கே பெயர்ப்பலகை அல்ல முக்கியம். ஆனால் உண்மையில் பெயர்ப்பலகையில்; கூட தமிழிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத இனவாத ஆட்சி இங்கே இருக்கின்றது என்பது தான் இதனூடான வெளிப்பாடாக இருக்கின்றது.

இந்த சிறிய விடயம் எங்களுடைய எல்லா விடயங்களுக்கும் ஒரு எடுத்தக்காட்டாக இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். எனவே இத்தகைய செயற்பாடுகளை எங்களுடைய கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த இடத்தில் எமது கட்சி தனது எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது.

காணாமல் போனோர் தொடர்பாக ஐனாதிபதி கூறிய விடயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஐனாதிபதி கோட்டாபாய கூறிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மக்கள் அந்தக் கருத்தை முற்றாக நிராகரிக்கின்றார்கள்.

அதாவது காணாமல் போனவர்கள் அத்தனை பேரும் இறந்திருக்கலாம். இறந்திருக்கக கூடும் அல்லது இறந்துவிட்டார்கள் என்று சொல்வது எந்தவகையில் நியாயமாகும். இந்த காணாமல் போனவர்கள் புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்வதும் எவ்வாறு நியயாமாகும்.

உண்மையில் புலிகள் தமது ஆயுதத்தை மௌனித்த பின்னர் அல்லது இவர்களுடைய வார்த்தையில் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் இரர்னுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் உறவுகளால் அவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது.

அந்த நேரத்தில் அத்தனை இரர்னுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்தவர் இப்பொழுது ஐனாதிபதியாக இருக்கின்ற கோத்தபாய ராஐபக்ச அவர்கள் தான். ஆகவே அவர் தான் முழுப் பொறுப்பையுமு; ஏற்க வேண்டியவர்.

ஆனாலும்; அவர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்வதனூடாக அவர்களை தாங்கள் கொன்றுள்ளார்கள் என்பதை அவர்கள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதாகத் தான் நாங்கள் கருதுகின்றோம்.
எனவே இந்த விடயத்தில் ஐநாவினுடைய தீர்மானத்திற்கு அமைவாக நீதியான விசாரணையும் பொறுப்புக் கூறலும் அவசியமாக உள்ளது. அது மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post