மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் க. எழில்அழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
விளையாட்டுப் போட்டிகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரம் அவசியமானவை அல்ல. இந்தப் போட்டிகள் உள ஆரோக்கியத்தை வளர்த்தெடுப்பதிலும் இன்றிமையாத பங்களிப்பை ஆற்றுகின்றன. வெற்றியையும் , தோல்வியையும் சமமாக மதிக்கக் கற்றுத் தருகின்றன. இந்தப் பண்பு அடுத்தவர் வெற்றியால் மனம் பொறாமைத் தீயில் வெந்துபோகாமல் தடுக்கின்றது.
விளையாட்டுப் போட்டிகள் வெற்றியை நோக்கிக் கூட்டாக உழைக்கும் மனப்பாங்கை வளரத்;தெடுக்கின்றன. கோல் கொடுத்து ஓடும் அஞ்சலோட்டத்தில் இறுதி வீரர் இலக்கைத் தொட்டு வெற்றிபெற்றாலும், இவரிடம் கோலைக் கொண்டு சென்று சேர்ப்பித்த எல்லா வீரர்களினதும் கூட்டு உழைப்பே இந்த வெற்றியின் பின்னால் உள்ளது. இவர்களில் ஒருவர் பின்தங்கியிருந்தாலும் இந்த அணிக்கு வெற்றி கிட்டியிராது.
விளையாட்டுப் போட்டிகள் அணித்தலைவர்கள் , இல்லத்தலைவர்கள் என்று சிறுவயதிலேயே தலைமைத்துவத்துக்குத் தயார் செய்யும் களங்களை உருவாக்கித்தருகின்றன. தலைமைத்துவத்தின் மிகச்சிறந்த பண்புகளில் ஒன்று அடுத்தவர்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்க வழிவிடுவது. ஒரு சிறந்த விளையாட்டு வீரன் இந்த நற்பண்பைத் தன்னில் விருத்தி செய்து கொள்வான்.
அடுத்தவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குகின்ற தலைமைத்துவப் பண்பை வலசைப் பறவைகளிடம் பார்க்கலாம். முன்னால் தலைமையேற்றுப் பறந்து செல்கின்ற வழிகாட்டிப் பறவை களைப்படைந்ததும் தனது வேகத்தைக் குறைத்து அதுவரை தன்னைப் பின்தொடந்து வந்த பறவைகளில் ஒன்றை முன்னே செல்ல வழிவிட்டுத் தலைமை இடத்தை வழங்குகின்றது. அரசியல்வாதிகளிடம் காணக்கிடைக்காத இந்த நற்பண்பை மாணவர்கள் தங்களிடம் வளர்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment