ஹராரேயில் நடைபெற்று வரும் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் மேத்யூஸ் இரட்டை சதம் அடிக்க இலங்கை முதல் இன்னிங்சில் 515 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹராரேயில் 19-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் மூன்று வீரர்களும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மஸ்வாயுர் 55 ரன்களும் கசுஜா 63 ரன்களும் எர்வின் 85 ரன்களும் சேர்த்தனர்.
சிகந்தர் ரஜா 41 ரன்களும் டிரிபானோ ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே 148 ஓவர்கள் விளையாடி 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் எம்புல்டேனியா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 92 ரன்களுடனும் தனஞ்ஜெயா டி சில்வா 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அரைசதம் அடித்த தனஞ்ஜெயா 63 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவும் 63 ரன்கள் அடித்தார். மறுமுனையில் மேத்யூஸ் தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 515 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Post a Comment