நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளரான சுரேந்திரன் நியமிக்கப்பட்டிருப்பதாலே இந்தக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
இத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீடுகள் பெரும் இழுபறிக்கு மத்தியில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே பங்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரெலோ அமைப்பிற்கு யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசன ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.
இந்த ஆசன வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரனை நியமிப்பதற்கு கட்சித் தலைமை தீர்மானித்திருந்தது. இதற்கமைய வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்திலும் கட்சித் தலைவரால் சுரேந்திரனை நிறுத்துவதென அறிவிக்கப்பட்டிருந்தது.
கட்சித் தலைமையின் இந்த முடிவு கட்சிக்குள் பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியிருந்த நிலையில் இதனைச் சமரசம் செய்வதற்காக கட்சியின் யாழ் மாவட்டக் குழுக் கூட்டம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சமரசம் செய்யலாமென்ற கட்சித் தலைமையின் சிந்தனைக்கு யாழ் மாவட்ட ரெலோ உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பைத் தெரிவித்தருந்தனர்.
குறிப்பாக கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் கட்சித் தலைமையின் தீர்மானத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருந்தார். இதுவே தற்பொது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை அல்லது பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.
இதே வேளை கட்சியின் முக்கியஸ்தர்களாக செயலாளர் நாயகம் சிறிகாந்தா மற்றும் அரசியல் தலைவர் சிவாஐpலிங்கம் ஆகியோர் ஏற்கனவே அக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கியிருக்கின்றனர். இதனால் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் கட்சிக்குள் மீண்டும் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் இன்னமும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. இவ்வாறான நிலைமைகளால் பெரும் சங்கடமான நிலைமையில் கட்சித் தலைமை இருப்பதாகவும் தெரிய வருகிறது.
Post a Comment