சிங்களத் தலைவர்கள் யாரானாலும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க கூடாதென்பதிலே தான் மிக அவதானம் - சித்தார்த்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மறு கருத்து வைத்திருப்பவர்களே கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை விமர்சனங்களை சுமத்தி வருவதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பிற்கு மறு கருத்து வைத்திருக்கின்றவர்கள் தான் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை, கூட்டமைப்பின் செயற்பாடுகளில் திருப்தியில்லை உள்ளிட்ட இவ்வாறான பல குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கின்றார்கள் என்பது உண்மை. ஆனால் எல்லா விடயங்களிலும் நாங்கள் எங்களால் இயன்ற அளவு முயற்சிகளை எடுத்திருக்கிறோம். முக்கியமாக அரசியலமைப்பு விசயத்தில் கூட அது முடிவுபெறாவிட்டாலும் கூட அது நிச்சயமாக எங்களுடைய தவறு அல்ல.
உண்மையில் இங்கிருக்கக் கூடிய சிங்களத் தலைமைகள் அது யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருமே இதைச் செய்யக் கூடாதென்று மிக கவனமாகச் செயற்பட்டமை இதற்கு ஒரு காரணமாகத் தான் இருந்தது. ஆனாலும் அதற்கான முயற்சிகள் கவனமாக எடுக்கப்பட்டு வந்தது. இருந்தும் இறுதி முடிவு எட்டவில்லை என்பது உண்மை.
அவ்வாறு முடிவு எட்டப்படாதென்பது ஓரளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட விசயம் தான். என்னைப் பொறுத்தவரையில் நான் இந்த அரசியலமைப்பு வராது என்று எதிர்பார்த்தது தான். ஏனென்றால் சிங்கள தலைமைகள், சிங்களக் கட்சிகளிலே இருக்கக் கூடிய முரண்பாடுகள் இதனைக் கொண்டு வர விடாதென்பது தான் இதற்கான காரணமாக இருக்கிறது.
அடுத்தது மற்ற விசயங்களில் காணி விடுவிப்பை பார்த்தால் கனிசமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. ஏதோ ஒன்றுமே நடக்கவில்லை என்ற மாதிரியான அபிப்ப்pராயம் கொடுக்கப்பட்டாலும் ஒரு தொகையான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளில் இருக்கக் கூடிய பலர் விடுதலையாக்கப்பட்டிருக்கின்றார்கள். வெளியில் விடப்பட்டிருக்கின்றார்கள். இப்படியான விசயங்களுக்கு எல்லாம் நாங்கள் பலமான அழுத்தங்களைக் கொடுத்திருக்கிறோம்.
மேலும் காணாமல் போனோர் சம்மந்தமாகவும் நாங்கள் அழுத்தங்கள் கொடுத்திருக்கிறோம். இந்த காணாமல் போனோருடைய அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால் அந்த அலுவலகம் பிரயோசனமற்றது என உறவுகள் சொல்கின்றார்கள். அது உண்மை தான். ஏனெனில் அவர்களாலும் ஏதும் செய்ய முடியாததொரு நிலைமை. அது சம்மந்தமாக பெரிதாக நாங்கள் அடையாவிட்டாலும் மற்ற விசயங்களில் பல விசயங்களில் அடைந்திருக்கிறோம்.
குறிப்பாக அபிவிருத்தி விசயங்களில் கூட கடந்த இரண்டு வருசமாக மிகப் பாரிய அபிவிருத்திகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. அதனைக் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. எந்தவொரு ஒழங்கைக்கு போனாலும் அது தெரியும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேறாக இருந்த ஒழுங்கை இன்றைக்கு தார் போடப்பட்டிருக்கிறது. ஆகவே அதுவெல்லாம் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆக நாங்கள் எங்களால் இயன்றதற்கமைய அந்த விசயங்களைச் செய்திருக்கிறோம் என்று மக்கள் விளங்கிக் கொள்வார்கள். ஆனால் அதற்காக் எல்லாம் பூர்த்தி அல்லது திருப்தி என்று நான் கூற மாட்டேன். ஏனென்றால் அரசாங்கம் நாங்கள் கேட்ட பல விசயங்களைச் செய்யவில்லை. இந்த வேலை வாய்ப்புக்கள் உட்டப பலவற்றில் சரியாக அரசு செயற்படவில்லை. இருந்தும் அரசாங்கம் செய்தவை திருப்தியில்லாமல் விட்டாலும் ஏதோ கொஞ்சமாவது நாங்கள் செய்திருக்கிறோம் என்று தான் நான் கருதுகின்றேன்.
Post a Comment