கூட்டமைப்பிற்குள் தலைமைத்துவ பிரச்சனை இல்லை. அவ்வாறாக அடுத்த தலைமைத்துவம் தொடர்பான சந்தர்ப்பம் எழுமாயின் மாவை சேனாதிராசாவே தலைவராக பொருத்தமானவராக இருப்பார். கூட்டுத் தலைமைத்துவம் அவசியமற்றது. இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வட மாகாண அவைத்தலைவருமான சீவீ.கே.சிவானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறித்தான சர்ச்சை தொடர்பில் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..
கூட்டமைப்பிற்குள் தலைமை குறித்து சர்ச்சையாக ஒன்றும் எழவில்லை. அரசல் புரசலாக ஒரு கதை ஊடகங்களில் வந்தது தான். ஆனால் அந்த மாதிரியான தலைமைத்துவப் பிரச்சனைகள் எங்களுக்குள் ஏற்படவும் இல்லை. அது கூட்டமைப்பிற்குள்ளேயோ அல்லது தமிழரசுக் கட்சிக்குள்ளோ எந்தவிதமான தலைமைத்துவப் பிரச்சனைகளும் கிடையாது.
ஆனால் அவ்வாறாக தலைமைத்துவப் பிரச்சனை என்றதாக வெளிவந்த செய்திகள் என்பது ஊகங்களின் அடிப்படையில் அல்லது அவரவருக்கு ஏற்றவாறான கருத்தியல் விளக்கங்களின் அடிப்படையில் வந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது தலைமைத்துவப் பிரச்சனை என்பது கூட்டமைப்பிற்குள் இல்லை என்பதை தெளிவாகச் சொல்லி வைக்கிறேன்.
மேலும் தற்போதைக்கு அந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான பேச்சுக்களோ அல்லது நகர்வுகளோ ஏதும் முன்னெடுக்கப்படவும் இல்லை. அதற்கான சூழல் எழவில்லை. சம்மந்தர் ஐயா தான் கூட்டமைப்பின் தலைவராக தொடர்வார். அதனுஐடய பிரதித் தலைவராக மாவை சேனாதிராசா தொடருவார்.
நான் மீண்டும் சொல்வது தலைமைத்துவ பிரச்சனை இப்பொழுது எழவில்லை. ஏனெனில் சம்மந்தர் ஐயா தொடர்ந்தும் கூட்டமைப்பின் தலைவராக இருப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால் அதற்குப் பிறகு ஒரு மாற்றம் வருமானால் சிரேஸ்ர தன்மையின் அடிப்படையில் கூட்டமைப்பின் தலைவராக இருக்கக் கூடிய எல்லா தகுதிகளும் மாவை சேனாதிராவிற்கு உண்டு. ஆகையினால் சம்மந்தருக்கு அடுத்ததாக மாவை சேனாதிராசா தான் கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்து இருப்பார்.
அதே நேரத்தில் அடுத்த தலைவராக சுமந்திரன் வருவதாக சொல்வது நான் ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொருவரும் ஊகங்களின் அடிப்படையில் சொன்ன கருத்துக்கள் தான். அவ்வாறு தானே அடுத்த தலைவரென சுமந்திரன் கூட சொன்னதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் எந்தக் காலத்தில் அவ்வாறு தலைமைத்துவத்தைப் பெறலாம் என்று சொல்லவில்லை. அதுவும் இப்ப உடனடியாக தான் தலைவராக வருவதாக கூட சுமந்திரன் சொல்லவில்லை.
இதேவேளை கூட்டுத் தலைமை கோரிக்கை இப்ப இல்லை. ஏற்கனவே எவ்வாறு இருந்ததோ அதே மாதிரியாக சம்மந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக தொடருவதற்கான நிலைப்பாடு தான் பங்காளிக் கட்சிகள் மூன்றிடமும் இருக்கின்றன. அதுவே தொடர்ந்தும் இருக்கும்.
மேலும் கூட்டுத் தலைமை என்ற விடயத்தில் என்னைப் பொறுத்தவரையில் அது தேவையற்றது. அத்தோடு நான் ஒரு நிர்வாகி என்ற முறையில் எந்த அமைப்பிற்கும் அல்லது எந்தக் கட்டமைப்பிற்கும் தலைமை ஒன்றாக இருக்க வேண்டுமென்பது தான் என்னுடைய நிலைப்பாடு. இரண்டு மூன்று பேர் இருந்தால் அது பிரச்சனைக்குரியது. ஆகவே தலைமை என்றது ஒன்றாகத் தான் இருக்க வேண்டும்.
Post a Comment