இக் கலந்துரையாடலில் உயர்ஸ்தானிகர் முதலில் தமது அறிமுகத்தை செய்து கொண்டதுடன் யாழ் மாநகரிற்கும் - கனடாவின் டொரொண்டோ மாநகரத்திற்கும் இடையில் உள்ள யாழ் மாநகரை திட்டமிடுவதற்கான உடன்படிக்கை தொடர்பில் கேட்டறிந்தார்.
அது தொடர்பில் முதல்வர் குறிப்பிடுகையில் டொரொண்டோ மாநகரத்திற்கும் - யாழ் மாநகரத்திற்கும் இடையில் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி யாழ் மாநகரை சிறந்த முறையில் திட்டமிடுவதற்கும் திட்டமிட்டு நீண்டகாலத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நகரத் திட்டமில் வல்லுனர் (அதிகாரி) ஒருவரை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எமது புலம் பெயர் அமைப்பான கனேடிய தமிழ் காங்கிரஸும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக குறிப்பிட்டிருந்தது.
அந்த வகையில் அண்மையில் கனேடிய தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று அதிகாரி மூலமாக கிடைத்த தகவலின் படி குறித்த திட்டத்தை இன்னும் 3 மாதங்களில் ஆரம்பிக்க முடியும் என்றும் அதற்கான முன் அனுமதி ஏற்பாடுகள் டொரொண்டோ மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டதை இங்கு முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு இங்கு மாநகரசபையின் பொறியியலாளர்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் மாகாண சபையின் பொறியியலாளர்கள் வல்லுனர்கள் இத் துறையில் சிறப்புத் தேர்ச்சியுடைய கல்வியியலாளர்கள் மாநகரசபை உறுப்பினர்களை உள்ளடக்கியதாக குழுவொன்றை ஏற்படுத்தி அங்கு திட்டமிடல்களை செய்து ஆளுநர் ஊடாக அனுமதி பெற வேண்டிய அமைச்சுக்களின் அனுமதிகளைப் பெற்று குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்திருக்கின்றோம். என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
இதற்கு உயர்ஸ்தானிகர் குறித்த திட்டத்தை காலம் தாழ்த்தாது டொரொண்டோ மாநகரத்துடன் கலந்துரையாடி சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துமாறும் குறித்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அடுத்து உயர்ஸ்தானிகர் மாநகர மக்கள் தொடர்பில் வினவினார். தான் கடந்த தடவை வருகை தந்திருந்த போது தான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்திருந்ததாகவும் அப்பொழுது அறிந்திருந்த விடயங்களில் உள்ள முன்னேற்றங்கள் உள்ளதா எனவும் மாநகர பிறஜைகள் சரி நிகர் சமனாக மதிக்கப்படுகின்றனரா? என வினவினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் எமது மாநகரத்தினுள் இருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் சார்ந்த விடயங்களில் ஒரு மாநகரத்தின் முதல்வராக நாம் திறம்பட செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் மாநகரத்தின் எந்த மக்களையும் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தியது இல்லை என்றும் தாங்கள் குறிப்பிட்டது போன்று மாநகரத்தினுள் தமிழ் முஸ்லிம் என்று பிரிவினை இன்று தமிழ் பேசும் மக்களாக அனைவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக எமக்கு கிடைக்கப் பெறுகின்ற நிதி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் உரிய முறையில் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது. மாநகரத்தின் முதல்வராக எந்தப் பிரிவினையும் காண்பித்தது கிடையாது. தாங்கள் அவர்களை சந்திக்கின்ற பொழுது அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்று உரிமையாக குறிப்பிட்டிருந்தேன்.
அதனைத் தொடர்ந்து மாநகரத்தின் பிரச்சினைகள் சவால்கள் குறித்து வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எமது பிரதான பிரச்சினையாக திண்மக்கழிவகற்றல் செயன்முறையிலேயே பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் மக்கள் கழிவுகளை தரம்பிரிக்காது வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் மக்கள் திண்மக்கழிவுகளை தரம்பிரித்து மாநகர கழிவு காவும் வண்டிகளில் வழங்காது தரம் பிரிக்காமல் பொது இடங்கள் வீதிகளில் வீசுவதனால் நாம் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் எனவே அதனை மாநகர ஊழியர்களால் அப்புறப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றது. ஊழியர்களைக் கொண்டு தரம்பிரித்துதான் அப்புறப்படுத்தப்படுகின்றது.
ஏற்கனவே தரம்பிரிக்காது திண்மக் கழிவுகளை சேகரித்து வைத்திருந்தமையினால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மேலும் எம்மை நெருக்குதல்களுக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் தற்பொழுது இது தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment