தமிழ் மக்களின் தலைமைத்துவமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரக் கூடாதென்றபதற்காக வல்லரசுகளின் சதி முயற்சியே விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியின் கூட்டணி உருவாக்கம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கூட்டு தேர்தலில் படுதோல்வியடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விக்கினேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணியில் ஏன் இணைந்து கொள்ளவில்லை என்று கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
உண்மையில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்ற கூட்டணியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு கூட்டு அல்ல. அது கூட்டமைப்பின் அதே கொள்கையோடு செயற்படப் போகின்ற இன்னொரு அணி. கூட்டமைப்பிற்குப் பின்னாலுள்ள வல்லரசுகளினால் தான் அந்தக் கூட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது.
அது ஏன் என்றால் கூட்டமைப்பு இன்றைக்கு மக்களிடம் செல்வாக்கு இழந்திருக்கிற நிலையில் மக்கள் புதிய மாற்று ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறதால் அந்த மாற்றும் இந்த வல்லரசுகளின் பிடிக்குள் இருக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தரப்பாகத் தான் நாங்கள் அதைப் பார்க்கின்றோம்.
பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சியில் ஆறு கட்சிகள் கூடியிருந்த பொழுது கூட இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று நாங்கள் கேட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் அதனை நிராகரிக்க முடியாது என்று சொல்லவில்லை. கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய குறிப்பாக இன்றைக்கு இந்தப் புதிய கூட்டை உருவாக்கியிருக்கிற தரப்புகளும் அந்த ஒற்றையாட்சிக்குரிய இடைக்கால அறிக்கையை நிராகரிக்கக் கூடாது என்று கடுமையாக வலியுறுத்தினர்.
அந்த நிலைமையில் தான் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்ற தரப்பு என்ற வகையிலும் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற சமஷ்டித் தீர்வைத் தான் நாங்கள் பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் செயற்படுகிற தரப்பு என்ற வகையில் அத்தகைய கொள்கைகளையுடைய இந்தத் தரப்புக்களுடன் இணையவில்லை.
மேலும் அங்கு ஒரு மாற்றும் கிடையாது. அது வெறுமனே கூட்டமைப்பில் இழக்கப்படுகின்ற செல்வாக்கு ஒரு நேர்மையான ஒரு அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கைகளுக்கு வரக் கூடாது என்பதற்காக அல்லது தடுப்பதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகத் தான் இந்த நபர்கள் கூடி கூட்டு என்று அறிவித்திருக்கிற விடயத்தை நாங்கள் பார்க்கிறோம்.
ஆகவே அவ்வாறானதொரு கூட்டில் நாங்கள் இணைந்து கொள்ளாதது நிச்சயமாக எங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்தக் கூட்டில் இருக்கின்ற தரப்புக்கள் நேற்று வரைக்கும் கூட்டமைப்பில் இருந்து அதன் செயற்பாடுகளை நியாயப்படுத்தியவர்களாகவே இருக்கின்றனர்.
அவர்கள் வெறுமனே கூட்டமைப்பிற்கு மக்களிடத்தே செல்வாக்கு இல்லாமல் போவதால் மக்கள் மாற்றத்தைதத் தேடப் போகின்றனர் என்ற நிலையில் தங்களை ஒரு மாற்றாக அடையாளப்படுத்தி வெற்றி பெறலாம் என்று கருதுகின்ற ஒரு தரப்பு தான் இது. அவை அனைத்தும் எமது மக்களுக்கும் தெளிவாக தெரிகின்றது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் இதே மாதிரியானதொரு முயற்சியொன்று எடுக்கப்பட்டிருந்தது. அதிலும் கூட்டமைப்பின் வெறுப்பால் எங்களின் கைகளுக்கு அந்தத் தலைமைத்துவம் வரக் கூடாது என்பதற்காக உதயசூரியன் சின்னத்தில் ஈபீஆர்எல்எப் தரப்புக்கள் எடுத்த முடிவாக இருந்தது. அதே ஆட்கள் தான் இன்றைக்கு இந்த புதிய பெயரில் அதே முயற்சியை எடுக்கின்றனர். ஆனால் எங்கள் மக்கள் கடந்த பத்து வருசத்தில் நடந்தவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
குறிப்பாக இந்த பத்து வருசத்தில் யார் நேர்மையாக செயற்படுகின்றனர் கூட்டமைப்பின் பிழைகளை யார் ஆரம்பத்தில் இருந்த சுட்டிக்காட்டி வருகின்றனர் யார் புதிய தலைமைத்துவத்திற்கு உரித்தானவர்கள் என்பதும் அது நாங்கள் தான் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தேர்தலில் இவர்களுடைய முயற்சி இன்னும் அந்தத் தெளிவை மக்களுக்குக் கொடுக்கும் என்பது தான் எங்களது கருத்து.
இன்றைக்கு உருவாக்கப்பட்டு இந்தப் புதிய கூட்டு தரப்பினரும் கூட்டமைப்பினரும் ஒன்று சேர்ந்தால் அது இன்னும் நல்லது. எங்களைப் பொறுத்தவரையில் இரு தரப்பிற்கும் இடையே வித்தியாசங்கள் ஏதும் இல்லை. குறிப்பாக விக்கினேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டமைப்புடன் சேர்ந்து வேலை செய்யத் தயார் என்று சொல்லியிருக்கின்றார்.
ஆனால் கூட்டமைப்பு பிழை என்று தான் புதிய மாற்றை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து ஒன்றாக வேலை செய்யத் தயார் என்றால் தேர்தலில் ஏன் அவர்கள் பிரிந்து நிற்க வேண்டும்.
ஆகவே அவர்களுக்கிடையில் கொள்கை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லை என்றால் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டியது தானே. அப்போது தான் யார் உண்மையில் கொள்கையில் உறுதியாக நேர்மையாக இருக்கின்றனர் என்பதை மக்களுக்கும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆகையினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் உண்மையில் கொள்கைக்காக இருக்கின்றது. ஏனைய அனைவரும் வெறும் அரசியல் மட்டும் தான் செய்கின்றனர் என்பதை மக்கள் விளங்கிக் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும்.
இலங்கைத் தீவில் வல்லரசுகளுக்கிடையியே கடும் பூகோளப் போட்டியொன்று நடக்கிறது. அந்தப் போட்டியில் இலங்கைக்குள்ளே இருக்கக் கூடிய அரசியலை ஒவ்வொரு வல்லரசும் கையாளுகிறது. அந்த வகையில் தமிழ் அரசியலை கடந்த 70 வருசத்திற்கு மேலாக கையாளுகிற தரப்பு இந்தியாவாகத் தான் இருந்திருக்கிறது.
தமிழர்களும் இந்தியாவுடன் ஒரு நட்புறவைப் பேனுவதற்கு இயல்பாகவே ஒரு வாய்ப்புக்கள் இருக்கிற நிலையில் அதனை இந்தியா கையாள்ந்திருக்கிறது. ஆகவே தாங்கள் விரும்பிய அடிப்படையில் வெறுமனே தங்களுடைய முகவர்களாகத் தான் தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கைத் தீவில் செயற்பட வேண்டுமென்று தான் இந்தியத் தரப்பினர்; விரும்புகின்றனர்.
ஆனால் துரதிஸ்ரவசமாக கூட்டமைப்பு தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டதால் இன்றைக்கு மக்கள் அவர்களை வெறுக்கிற நிலையில் மக்கள் கூட்டமைப்பை நிராகரித்து ஒரு மாற்றைத் தேடத் தான் போகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
அந்த மாற்று கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாங்களாகத் தான் இருந்தோம். நாங்கள் எவருடைய எதிரியும் இல்லை. அதே நேரத்தில் எவருடைய முகவர்களும் நாங்கள் அல்ல. எங்களது தமிழ் மக்களை மையப்படுத்தி செயற்படுகிற தரப்பாகவே நாங்கள் இருக்கிறோம். அதில் எந்தவிதமான விட்டுக் கொடுப்பும் செய்ய நாங்கள் தயாரில்லை.
அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான கொள்கை ரீதியாக ஒரு கொள்கைப் பற்றைக் கொண்ட எங்களது அமைப்பை இந்தியா போன்ற வல்லரசுகள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்களது நலன்களுக்காக தங்களால் கையாளக் கூடிய தரப்புக்களை தான் விரும்புவார்கள்.
ஆகவே நேர்மையில்லாத வெறுமனே சுயநலன் பதவி ஆசை போன்ற அடிப்படையில் செயற்படுகிற தரப்புக்களைத் தான் அவர்கள் கையாளுவதற்கு இலகுவாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு தரப்பைத் தான் மாற்றாக இங்கு உருவாக்கி எங்களைத் தோற்கடித்து தங்களது பிடிக்குள் வைத்திருக்கிற ஒரு தரப்பாக பார்க்கின்றனர். அது தான் இங்கு நடக்கிறது.
இதேவேளை மாற்று என்பது அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அதனை விட வேறு எவரும் மாற்று இல்லை. இன்றைக்கு அவர்களே தாங்கள் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கூடு;டமைப்புடன் சேர்ந்து செயற்பட தாயர் என்று சொல்கின்றனர். ஆக கொள்கையளவில் அவர்களுக்கு எந்தவிதமான வேறுபாடும் இல்லை. வெறுமனே தேர்தலுக்கான உருவாக்கப்பட்டுள்ள ஒரு அனுகுமுறை. அது வொரு கூட்;டும் இல்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கைகளுக்கு ஒரு தலைமைத்தவம் வரக் கூடாதென்பதற்காக ஏதோவொரு வகையில் தடுப்பதற்காக மக்களை திசை திருப்பி குழப்புவதற்கு எடுக்கப்படுகிற ஒரு முயற்சி. இது படுதோல்வியடையும். துமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களின் நேர்மையான தலைமைத்தவமாக தமிழ் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் .
Post a Comment