நேர்மையாக வரி செலுத்துவதாகவும் எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுதொடர்பாக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை அரசியல் கட்சியினர் சுய லாபத்துக்காக தூண்டி விடுகிறார்கள். மாணவர்கள் எதையும் ஆராயாமல் போராட்டம் செய்தால் அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
பிரிவினையின் போது செல்லாமல் இங்கேயே தங்கிவிட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. என்சிஆர் இன்னும் அமல்படுத்தப்படவில்லை; அதுகுறித்து ஆலோசித்துத்தான் வருகின்றனர்.
என்பிஆர் அவசியம் தேவை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment