யாழ் நல்லூரிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..
தமிழ் மக்களின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாகக் காணப்பட்ட யாழ் பல்கலைக்கழக சமூகமானது இன்று ஒட்டுமொத்த தமிழினமும் தலைகுனியும் விதத்தில் செயற்பட்டிருப்பதானது எமக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெறும் ராக்கிங் எனப்படும் பகிடிவதையானது வரைமுறையற்ற வகையில் பாலியல் துன்பறுத்தலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விடயம் அங்கீகரிக்கக் கூடியது அல்ல.
தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாஷைகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி எனும் வகையில் எமது சமூகத்தின் நல்லொழுக்கம் மற்றும் விழுமியங்கள் தொடர்பில் அக்கறை மிக்கவர்களாக செயற்படுவது எமது கடமையாகும்.
அந்த வகையில் சமூகத்தின் விழுமியங்களுக்கு எதிராகச் செயற்பட்டுள்ள குறித்த மாணவர்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறித்த மாணவர்கள் மீது பல்கலைக் கழகத்தின் உள்ளார்ந்த விசாரணைகளோடு மட்டுப்படுத்தாது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
பகிடிவதை எனும் பெயரில் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு குறித்த பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியமையானது பாரதூரமானதும் தண்டணைக்கு உரியதுமான குற்றமாகும்.
ஆகவே வட மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இவ்விடயம் தொடர்பில் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தினர் பகிடிவதையை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மாணவர் ஒன்றியங்கள் ஒருசில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதை நிறுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்விச்சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது பிரதான கடமை என உணர்ந்து செயற்பட வேண்டும்.
அத்துடன் தவறிழைத்த மாணவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு மாணவர் ஒன்றியம் முன்வர வேண்டும். எதிர்வரும் காலத்தில் நாம் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருப்போம். இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேலும் அநுமதிக்க முடியாது.
ஏனெனில் எமது சமூகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் தற்கொலை மரணங்களின் பின்னணியில் இவ்வாறான காரணிகளும் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டிருக்காது விடின் எமது கட்சியின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு தயாராக உள்ளோம்.
Post a Comment