சிறிலங்காவின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு கரிநாள் - போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை - Yarl Voice சிறிலங்காவின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு கரிநாள் - போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை - Yarl Voice

சிறிலங்காவின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு கரிநாள் - போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்து வடகிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன் அந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அனைவரையும் கோருகின்றோம் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்று மாலை நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அச் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது..

ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம் மக்களும் காலாதி காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்ற போதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்த்தியின் விளிம்பில் நின்று இலங்கையின் சுதந்திரத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி; நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்

இலங்கை ஐரோப்பியரின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்டு 72 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதும் ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் காலணித்துவ ஆட்சி ஒன்றின் கீழே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ஆண்ட பரம்பரையான நாம் அடங்கி ஒடுங்கிப் போய் இன்னொரு தேசத்தவரினால் அடக்கியாளப்படுவதனை நாம் விரும்பவில்லை

எமது மண்ணில் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை கண்டறியப்பட வேண்டும் நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் இத்தகைய அடிப்படையான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

உலக ஒழுங்கில் சிறுபான்மை இனங்களை பெரும்பான்மை அரசுகளிடம் இருந்து காப்பாற்ற பல சட்டங்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்துள்ளன. அதன் ஆரம்பமாக 1949ம் ஆண்டு ஜெனீவா தீர்மானம் 49 கொண்டு வரப்பட்டிருந்தது அதன் தொடர்சியாக பல்கன் குடியரசுகளை முன் நிறுத்தி  1992ம் ஆண்டு ஐநாவின் பாதுகாப்பு சபை தீர்மானத்தில் 780 ஆவது தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது இந்த தீர்மானத்தின் படி இனச் சுதந்திரமானது இனப்படுகொலையின் வரைமுறைகளுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

அந்த வகையில் மேற்குறிப்பிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் என்பவை இனப்படுகொலையாகவே அமைந்து காணப்படுகின்றது இத்தகைய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையாகும்.

சர்வதேசம் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மையினை புரிந்து கொள்ள வேண்டும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கரிசனை கொள்ளவில்லை இத்தகைய ஒரு சூழ்நிலையில் சர்வதேச பொறிமுறை ஒன்றினூடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்பிப்பதற்காக கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலிலும் எமது உறவுகள் கண்ணீரோடு வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் போது உண்மையான அறத்துடன் தமிழ் இனத்தின் மீது பற்றுக் கொண்ட எவரும் சிறீலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார்கள்.

அதே வேளை சிறீலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அறிவித்து அன்றைய நாளில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாகவும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பூரண ஆதரவினையும் வழங்குதோடு போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ் உறவுகள் அனைவரிடமும் அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

இலங்கையில் ஆட்சிப்; பீடம் ஏறும் எந்தவொரு அரசியல் தலமையும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலும் சிங்கள பௌத்ததிற்கான முன்னுரிமை என்பவற்றில் இருந்து விலகி ஒரு போதும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை தாமாக விரும்பி உருவாக்க மாட்டார்கள் என்பது வரலாறு எமக்கு கற்றுத்தந்துள்ளது ஆகவே தொடர்ந்தும் நாம் ஏமாறத் தயாரில்லை என்பதை கூறிக் கொள்வதோடு எமது மக்களின் ஜனநாயக முறையிலான போராட்டங்களில் எமது மாணவர் ஒன்றியம் தொடர்ந்தும் பயணிக்கும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post