தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழை போதனா வைத்தியசாலையாகத் தரம் உயரவேண்டும். அரசமைப்புக்கு முரணாக தற்போது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் அலகு மாகாணத்தின் கீழ் உள்ள எமது வைத்தியசாலையில் இயங்குகின்றது. போதனா வைத்தியசாலையாக மாறினால்தான் விஞ்ஞானக் கல்வியில் உயர்நிலையையும் யாழ்.மாவட்டம் அடையமுடியும்.
இவ்வாறு தெரிவித்தார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமான லயன் சி.ஹரிகரன்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தியாகேந்திரன் கிளினிக் பிரிவு இன்று வைத்திய அத்தியட்சகர் விமலசேன தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இந்தநிகழ்வில் வாழ்த்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகிய இருவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். அவர்கள் முன்பு பிரதேச மக்கள் சார்பிலும் வைத்தியசாலை சமூகம் சார்பிலும் நோயாளர்கள் சார்பிலும் அக்கறையுடையவன் என்ற வகையில் இந்தக் கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.
மூன்று தசாப்தகால யுத்தத்தால் எமது பிரதேசம் கல்வியில் பின்தங்கியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் தெல்லிப்பழை வைத்தியசாலை மீள்குடியேற்றப்படுகின்றபோது மிகக்குறைந்த ஆளணியுடன் மாவட்ட வைத்தியசாலை என்ற தரத்துடனேயே இருந்தது. வைத்திய நிபுணர் சிவயோகனைத் தவிர எந்த வைத்திய நிபுணரும் இல்லை.
தற்போது அது விரிவாக்கமடைந்து வடக்கு மாகாணத்தில் இரண்டாவது பாரிய வைத்திய சேவையை வழங்குகின்ற நிறுவனமாக மாறியுள்ளது. ஒரு நாளைக்கு வெளிநோயாளர் பிரிவில் 1500 இற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். 100 நோயாளருக்காகக் கட்டப்பட்ட வெளிநோயாளர் பிரிவில் தற்போது 1500 நோயாளர்கள் பயன்பெறுகின்றமையால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
தியாகி அறக்கொடை நிறுவுநர் தியாகேந்திரனின் தாராள மனதினால் ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநோயாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் சிரமங்களை எதிர்கொண்ட நோயாளர்கள் ஒவ்வொருவரும் தற்போது தமது சேவையை இலகுபடுத்தியமையால் வள்ளல் தியாகேந்திரனை வாழ்த்துவர்; ஆசீர்வதிப்பர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
இலங்கையில் எங்குமில்லாதவாறு - அரசமைப்பின் 13 ஆம் திருத்தத்துக்கு முரணாக - ஒரு மாகாணத்தின் கீழ் போதனா பிரிவு சட்டவிரோதமாக இயங்குகின்றது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அதிசிறப்புப் பிரிவாகிய புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு காணப்படுகின்றது. இதற்குரிய மருத்துவப் பொருள்கள்இ பல பில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பு என்பவற்றை மத்திய அரசாங்கமே தற்போது வரை மேற்கொள்கின்றது.
ஆயினும்இ வடமாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் - யாழ்.மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் - 45 வீதம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே ஒதுக்கப்படுகின்றது. இந்த 45 வீதமும் உத்தியோகத்தர்களின் சம்பளத்துக்கும் மேலதிக நேரக் கொடுப்பனவுக்குமே பெரும்பகுதி செலவாகின்றது.
யாழ்.மாவட்டத்தில் 4 ஆதார வைத்தியசாலைகள் 23 பிரதேச வைத்தியசாலைகள் 13 சுகாதார மருத்துவ மனைகள் என்பவற்றுக்கு மீதி 55 வீதமே வழங்கப்படுகின்றது. இதனால் அனைத்துக்கும் சரியான சேவையை வழங்கமுடியாது மாகாண அமைச்சு திணறுகின்றது.
எமது கல்வி வளர்ச்சியில் யாழ்.மருத்துவபீடம் மிக முக்கிய ஒரு வளாகமாகும். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தை வளர்ச்சியுறச் செய்யவேண்டுமானால் - யாழ்.மாவட்டத்தில் உருவாகும் வைத்தியர்கள் வைத்திய நிபுணர்கள் வெளியே செல்லாமல் எமது பிரதேசத்தில் கடமையாற்றவேண்டுமானால் - தெல்லிப்பழை போதனா வைத்தியசாலை உருவாகவேண்யது அவசியமாகும்.
மாகாணத்துக்குரிய அதிகாரப் பகிர்வு எமது அரசியல் அபிலாஷை என்ற தனிப்பட்ட குறுகிய வரட்டுக் கௌரவங்களுக்கு அப்பால் எமது பிரதேச மக்களின் - நோயாளர்களின் - நலனை நாங்கள் முன்னிறுத்திப் பார்க்கவேண்டும். தூர நோக்குடையவர்களாக அரசியல்வாதிகள் செயற்படவேண்டும்.
கொழும்பு கண்டி கராப்பிட்டிய ஆகிய மாவட்டங்களுக்கு நிகராக எமது கல்வியை உயர்த்தவேண்டுமானால் - எமது மருத்துவத்துறையில் உயர்வை அடையவேண்டுமானால் - தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதே ஒரே வழி.
இந்த நல்ல நிகழ்வில் வைத்து நான் இந்தக் கோரிக்கையை மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கின்றேன். இதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நாம் வழங்கத் தயாராக உள்ளோம். அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்துகின்றேன். - என்றார்.
Post a Comment