நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஷ்ரேயாஸ் அய்யர் (103) கேஎல் ராகுல் (88 அவுட் இல்லை) விராட் கோலி (51) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்க 347 ரன்கள் குவித்தது.
பின்னர் 348 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில் ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 85 ரன்னாக இருக்கும்போது மார்ட்டின் கப்தில் 41 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பிளண்டெல் 9 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு நிக்கோல்ஸ் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. நிக்கோல்ஸ் 82 பந்தில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 28.3 ஓவரில் 171 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டெய்லர் 38 பந்தில் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
4-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். அப்போது நியூசிலாந்தின் வெற்றிக்கு 126 பந்தில் 177 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்தனர்.
34-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இருந்து ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்ய ஆரம்பித்தது. டாம் லாதம் இந்த ஓவரில் ஒரு சிக்ஸ்இ ஒரு பவுண்டரி அடித்தார். ராஸ் டெய்லர் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 45 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் நியூசிலாந்து 14 ரன்கள் சேர்த்தது.
சர்துல் தாகூர் வீசிய அடுத்த ஓவரில் 12 ரன்கள் சேர்த்தது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்களும் ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும் 38-வது ஓவரில் 11 ரன்களும் அடித்தது. பும்ரா வீசிய 39-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டாம் லாதம் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் அடித்தது.
40-வது ஓவரை ஷர்துல் தாகூர் இந்த ஓவரில் 22 ரன்கள் விளாசியது. நியூசிலாந்து 34-வது ஓவரில் இருந்து 40-வது ஓவர் வரை 42 பந்தில் 96 ரன்கள் குவித்தது. இந்த ஜோடி அதிரடியால் ஆட்டத்தை இந்தியாவின் கையில் இருந்து தட்டிப்பறித்தது நியூசிலாந்து. இதனால் கடைசி 10 ஓவர்களில் 52 ரன்களே தேவைப்பட்டது.
சதம் அடித்த ராஸ் டெய்லர் 108 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 48.1 ஓவரில் 348 ரன்களை எட்டி நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம் லாதம் 48 பந்தில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 9 ஓவர்களில் 80 ரன்களும் குல்தீ யாதவ் 10 ஒவர்களில் 84 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
Post a Comment