யாழிலிருந்து வெளிவருகின்ற வலம்புரி பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
வலம்புரி பத்திரிகை அலுவலகத்தினுள் 30 பேர் அடங்கிய குழு ஒன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
ஐனநாயக ரீதியாக வெளியிடப்பட்ட கருத்து ஒன்றிற்கு வன்முறை வழியாக பதிலளிக்க முற்பட்டமை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாத கோளைத்தனம்.
மத ரீதியான சகிப்பு தன்மையுடன் சகோதரர்களாக வாழும் எமது சமூகத்தில் மத அடிப்படையிலான குரோதத்தை ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அமைந்திருக்கின்றது.
இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அனுமதிக்கப்பட முடியாத செயல். இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.
இச்செயலில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சமின்றி தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
நாம் வலம்புரி பத்திரிகையுடன் பக்க பலமாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறான முனைப்புக்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
Post a Comment