அடுத்து வரும் தேர்தல் களமென்பது பலமுனைப் போட்டிகளுடன் சவாலானதாகவே அமையுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் தேர்தல் களம் என்பது கடும் போட்டியாக இருக்கும். குறிப்பாக யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டோமேயானால் பலமுறைப் போட்டி இம்முறை நிலவும். அதாவது கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈபீஆர்எல்எப், முன்னர் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளும்;, ஈபிடிபி, சுதந்திரக் கட்சி, பெதுஐன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி என பல கட்சிகள் நிறைந்த போட்டியாக இம்முறைத் தேர்தல் களம் அமைகிறது.
ஆகையினால் இது மிகப் பெரிய சவால் மிக்க தேர்தலாக அமையும். அத்தகைய சவால் மிக்க தேர்தலாகவே அடுத்து வரும் தேர்தலை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதே போல யாழ்ப்பாணத்திற்கு வெளியில் ஏனைய மாவட்டங்களிலும் பெரும்பான்மைக் கட்சிகளின் செல்வாக்குகள் அதிகரித்திருக்கின்றன. அதனை கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் முடிவுகளும் வெளிப்படுத்தியிருந்தன.
இவ்வாறு தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்ற நிலைமைகள் இருந்தாலும் இன்னும் பாராளுமன்றம் கலைக்கப்படாத நிலைமையே இருக்கின்றது. ஆனால் பாராளுமன்றம் கலைத்த பின்னர் வடக்கு கிழக்கைப் பொறுது;தவரையில் பல கூட்டுகள் உருவாகிறதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. அந்த வகையில் இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது சவால் மிக்க பலமுனைப் போட்டியுடைய தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2004 இல் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். 2010 இல் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் 2015 இல் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது பலர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருக்கின்ற நிலைமைகள் இருக்கின்றன. இவ்வாறாக கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றம், பிளவுகள். பல கூட்டுகள் என எல்லாம் இருக்கின்ற நிலைமைகளைப் பார்க்கின்ற போது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இம் முறை பலமான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கின்றது.
அந்த வகையில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களோடு புதிதாக வரப் போகின்ற வேட்பாளர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் மக்கள் மத்தியிலே நன்கு பரீட்சயம் உள்ளவர்களாக நன்மதிப்பு உள்ளவர்களாக வாக்குகளை எடுக்கக் கூடியவர்களாக அதனூடாக கட்சிக்கும் அதன் கொள்கைக்கும் விசுவாசமாக இருந்து செயற்படக் கூடியவர்களாக மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்யக் கூடிய நல்ல முகங்களைத் தேட வேண்டியிருக்கின்றது. அதனையே கூட்டமைப்பு செய்ய வேண்டும்.
Post a Comment