வருமான வரித்துறை சோதனை காரணமாக கடந்த இரு தினங்களாக படப்பிடிப்புக்கு செல்லாமல் இருந்த விஜய் இன்று மீண்டும் மாஸ்டர் ஹூட்டிங்கில் கலந்து கொண்டார்.
நடிகர் விஜய் வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது விஜய் தனது புதிய படமான 'மாஸ்டர்' படப்பிடிப்பிற்காக நெய்வேலி சென்றிருந்தார். அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை தங்களது வாகனத்திலேயே சென்னை அழைத்து வந்து அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.
நேற்று 2-வது நாளாக விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவடைந்தது. படப்பிடிப்பில் இருந்து விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றதால் நேற்று முன்தினம் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. நேற்று விஜய் இல்லாமல் மற்ற நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று நெய்வேலி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்ற 'மாஸ்டர்' படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். இதற்காக இன்று சென்னையில் இருந்து கார்மூலம் நடிகர் விஜய் நெய்வேலி வந்தார். பின்னர் அங்கு 2-வது சுரங்கத்தில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இன்று காலை 11 மணியளவில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர்கள் விஜய்இ விஜய்சேதுபதி ஆகியோர் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தகவல் நெய்வேலி மற்றும் சுற்றுபுற பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் திரண்டர்.
படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு காட்சிகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அங்கு என்.எல்.சி. அதிகாரிகள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
Post a Comment