இச்சந்திப்பின்போது கடந்த காலங்களில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். மேலும் இலங்கை அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகித்த இணைத்தலைமை நாடுகள் இந்தியா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளிற்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
விடுதலைப்புலிகளுடனான யுத்த காலத்தின்போது இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதும் அவற்றினை நிறைவேற்ற தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த வாக்குறுதிகள் கைவிடப்படலாகாது என்றும் போராட்டம் தமிழ் மக்களினுடையது எனவே தமிழ் மக்களின் ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத பிளவுபடாத நாட்டினுள் அதிகாரபரவலாக்கம் என்ற நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் எனவும் இரா சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தினார்.
இலங்கை அரசாங்கம் கொடுத்த இந்த வாக்குறுதிகள் தொடர்பில் சர்வதேச சமூகம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அமைதியானது இலங்கை அரசாங்கம் இந்த வாக்குறுதிகளில் இருந்து விலகி செல்வதற்கு இன்னும் ஊக்கத்தினை கொடுப்பதாகவும் வலியுறுத்தினார்.
மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய இரா சம்பந்தன் விசேடமாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் தங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்னும் உண்மை கண்டறியப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அப்படியானவர்கள் காணாமல் போயிருந்தால் அதற்க்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் வலியுறுத்தினார். எமது மக்கள் இந்த உண்மையினை கண்டுகொள்வதற்காக ஏங்கி தவிக்கிறார்கள் என்றும் சர்வதேச சமூகம் ஐந்தே கருமத்தில் உறுதியாக செயற்பட்டு உண்மையினை கண்டறிய உதவ முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த கருமங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகள் மிக விரைவில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் வெளிப்படும் என ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் வாக்குறுதி அளித்தனர்.
Post a Comment