காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பில் இரானுவத் தளபதி கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது - சபா குகதாஸ் - Yarl Voice காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பில் இரானுவத் தளபதி கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது - சபா குகதாஸ் - Yarl Voice

காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பில் இரானுவத் தளபதி கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது - சபா குகதாஸ்

படையினர் வசமிருந்த பொது மக்களின் காணிகளை விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் மீளக் குடியமர்வதில் ஆர்வம் காட்டவில்லை என்ற இரர்னுவத் தளபதியின் கருத்து ஏற்க முடியாதது. மக்கள் குடியமரவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஏனைய காணிகளை படையினர் விடுவிக்காமல் வைத்திருக்கவும் முடியாது.

ஆகையினால் மக்களின் அனைத்துக் காணிகளையும் படையினர் விடுவித்து அவர்கள் மீளக் குடியமர்வதற்குரிய அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த காணிகளை இரானுவம் விடுத்தும் அங்கு குடியமர்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையென யாழ் மாவட்ட படைத் தளபதி தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் இரானுவத்தினர் வசம் இருந்தன. இதில் குறிப்பிட்ட ஒரு பகுதி காணிகள் தற்பொது இரானுவத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் இரானுவத்தினரே வைத்திருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் தான் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தாலும் மக்கள் மீளக் குடியமராமல் இருக்கின்றதாக படைத் தளபதி கூறியிருக்கின்றார். மேலும் விடுவிக்கப்பட்ட காணிகளிலே குடியமர்வு நடக்காத நிலையில் படையினர் வசமுள்ள ஏனைய காணிகளையும் விடுவிக்குமாறு கோருகின்றதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் நாட்டில் நடைபெற்ற யுத்தம் காணரமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்போதும் முகாம்களிலேயே வாழ்கின்றனர். அவர்கள் தமது காணிகளை விடுவிக்குமாறே கோரி வருகின்றனர். அவ்வாறு தமது காணிகளை விடவித்து தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்க் குடியமர்த்துமாறு தான் கோரி வருகின்றனர். ஆனால் அந்தக் காணிகள் பலவும் விடுவிக்கப்படாமலேயே தொடர்ந்தும் இருக்கின்றது.

உண்மையில் நீண்டகாலமாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் இருந்த வீடுகள் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு அந்தக் காணிகளும் பற்றைகள் நிறைந்த காடுகளாக இருக்கின்றன. மேலும் அங்கு மக்கள் மிள்குடியமர்வதற்கான வசதி வாய்ப்புக்களையும் முழுமையாக அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

ஆனாலும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சென்று மீளக் குடியமர்ந்து தான் வருகின்றனர். மேலும் அந்தக் காணிகளிற்குச் சென்று மக்கள் குடியமர்வதற்கான வசதிகளையும் அவர்களின் வாழ்வாதார உதவிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனை அரசாங்கம் முழுமையாகச் செய்யுமிடத்தே அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் அங்கு சென்று குடியமர்வதில் எந்தப் பிரச்சனைகளும் இருக்காது.

ஆகவே அரசாங்கம் தாம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டுவிட்டு மக்கள் மீளக் குடியமரவில்லை என்று கூற முடியாது. அதே போல குறிப்பிட்ட காணிகளை மட்டும் விடுவித்துவிட்டு அங்கு மக்கள் மிளக் குடியமராமல் ஏனைய காணிகளையும் விடுவிக்குமாறு கோருவதாக இரானுவத்தினர் கூறுவதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

ஆகையினால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீளக் குடியமர்வதற்குரிய முழுமையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் அனைத்தும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். இதனை தான் மக்கள் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். இதனைச் செய்யாமல் மக்களைக் குறை கூறுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு குடியமரவில்லை என்று காரணம் காட்டி ஏனைய காணிகளை விடுவிக்கமாலும் இருக்க முடியாது. பாது மக்களின் காணிகள் பொது மக்களுக்கெ சொந்தமானவை. ஆகையினால் அந்தக் காணிகள் அனைத்தையும் படையினர் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கப்படுகின்ற காணிகளில் மக்கள் குடியமர்வதற்குரிய வசதிகள் வாய்ப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post