மக்களின் போராட்டத்தையடுத்து விரைந்து செயற்பட்ட மாநகர சபை - Yarl Voice மக்களின் போராட்டத்தையடுத்து விரைந்து செயற்பட்ட மாநகர சபை - Yarl Voice

மக்களின் போராட்டத்தையடுத்து விரைந்து செயற்பட்ட மாநகர சபை

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொம்மைவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத தெரிவித்து அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று காலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக பல தடவைகள் மாநகர சபைக்குத் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள் இனிமேலாவது உரிய நடவடிக்கையை மாநகர சபை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வீதி மறியலிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் மற்றும் மராமத்துக்குழுத் தலைவர் கிருபாகரன் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.

இதன் போது சட்டவிரோத கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதாகவும் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதாகவும் மாநகர சபை உறுப்பினர்கள் வழங்கிய உறுதிமொழிகளையடுத்து இன்று காலையிலையே போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட மாநகர சபை அப்பகுதியில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதைக் கண்காணிக்கும் வகையில் சீசீரி கமாராக்களை அப் பகுதியில் பொருத்தியதுடன் கொட்டப்பட்டிருந்த குப்பைபளை அகற்றி அப்பகுதியை துப்பரவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post