நண்பர்களின் கூட்டணியே 'சங்கத்தலைவன்' என்று அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசினார்
மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி ரம்யா கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தலைவன்'.
வெற்றிமாறன் மற்றும் உதயா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
இந்தப் படம் மொத்தமாகவே நண்பர்களின் கூட்டணி. நானும் மணியும் பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்கள். கருணாஸும் உதய்யும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். செல்வம் மகன் ராபர்ட்டின் இசைப் பிடித்திருந்ததால் மட்டுமே இசை அமைக்கச் சம்மதம் தெரிவித்தேன். வெறும் நட்பால் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது.
இப்போது இந்த மாதிரி ஒரு படம் எடுத்து அதை ரிலீஸ் பண்றதே கஷ்டமாக இருக்கிறது. அதைச் சரியாக நிதானமாகப் பண்ண வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் ஒரு கதையைச் சொல்ல வேண்டுமானால் முதலில் சமுத்திரக்கனியைத் தான் கூப்பிட வேண்டியதுள்ளது. இந்தக் கதையைக் கேட்டவுடன் பண்றேன் எனச் சொன்னார். இந்தப் படத்துக்குள் அவர் வந்தப் பிறகு படத்தின் ரீச் பெரிதாகி உள்ளது. அவருக்கு நன்றி.
சீனிவாசன் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது . பாரதிநாதன் நாவல் தான் இப்படம். அந்த நாவல் தான் இந்தப் படத்தின் மூலதனம். அதை ஒரு படத்துக்குள் அடக்க முடியுமா என்றால் கொஞ்சம் சிரமமானது தான். அதில் ஒரு சின்ன பகுதியை மட்டுமே எடுத்து படமாகச் செய்திருக்கிறார்கள். இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.
Post a Comment