ஆப்கானிஸ்தான் நாட்டில் எதிர்கட்சி தலைவர் பங்கேற்ற நினைவு தின கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அந்நாட்டின் முன்னாள் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா.
இந்நிலையில் அந்நாட்டின் காபுல் நகரில் ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவரான அப்துல்லா அப்துல்லா இன்று பங்கேற்றார்.
அரசியல் தொடர்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அப்துல்லா உரையாற்றிக் கொண்டிருந்த போது அந்த கூட்டத்தை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் ராக்கெட்களை ஏவுயும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த கோர தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அப்துல்லா உயிர்தப்பினார். நினைவு தினக்கூட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்க படைகளுக்கும் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment