சனசமூக நிலையங்கள் இவ்வாறு காவல்நிலையங்கள் போன்று தொழிற்படாவிடின் அங்கு போதைப் பொருட்பாவனை, வன்முறைக் கலாச்சாரம் மேலோங்குகின்றது. இதைச் சாட்டாக வைத்து குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் இராணுவத் தலையீடு அங்கு அதிகரிக்க நாமே காரணமாக அமைவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
கோண்டாவில் மத்திய சனசமூக நிலையத்தின் வைரவிழா நேற்று சனிக்கிழமை (07.03.2020) நிலையத் தலைவர் சி.ஆனந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சிவில் நிர்வாகத்தில் படைத்தரப்பின் பிரசன்னம் உத்தியோகப் பற்றற்ற விதத்தில் இருந்தது. ஆனால், ஜனாதிபதியாகக் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற பின்னர் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு உத்தியோகபூர்வமாக அதிகரித்து வருகின்றது.
அரச வேலைகளுக்கான நேர்முகத்தேர்வுகளில் இராணுவத்தினர் உட்காந்திருக்கின்றனர். மணற் கொள்ளையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் காவற்துறைக்குப் பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தபபட்டுள்ளனர். நாடு மெல்ல மெல்ல இராணு ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கிரீஸ் பூதங்கள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. பொதுமக்களை அச்சுறுத்திய கிறீஸ் பூதங்களைப் பிடிப்பதற்கு காவல்துறை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், கோண்டாவில் மத்திய சனசமூக நிலையம் மாத்திரம்தான் கிறீஸ் பூதத்தைப் பிடித்து சனசமூக நிலையத்தினுள் அடைத்து வைத்தது. அந்தளவுக்கு கோண்டாவில் மத்திய சனசமூக நிலையம் கிராமத்தை வழிப்படுத்துவதிலும் கிராமத்தைப் பாதுகாப்பதிலும் காவல்நிலையம் போன்றே செயற்பட்டு வருகின்றது.
அதனால்தான் இதன் இயங்கு எல்லைக்குள் வாழுகின்ற சமூகம் குற்றச் செயல்களில் ஈடுபடாத நற்சமூகமாக விளங்குகின்றது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய சனசமூக நிலையங்களும் கிராமங்களை நல்வழிப்படுத்துகின்ற காவல் நிலையங்கள் போன்று செயற்பட முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment