தமிழர் அரசியல் பரப்பில் இளம் இரத்தம் புகுத்தப்பட்டு புதிய அரசியல் மாற்றம் உருவாக்க வேண்டும் - மணிவண்ணண் - Yarl Voice தமிழர் அரசியல் பரப்பில் இளம் இரத்தம் புகுத்தப்பட்டு புதிய அரசியல் மாற்றம் உருவாக்க வேண்டும் - மணிவண்ணண் - Yarl Voice

தமிழர் அரசியல் பரப்பில் இளம் இரத்தம் புகுத்தப்பட்டு புதிய அரசியல் மாற்றம் உருவாக்க வேண்டும் - மணிவண்ணண்

தமிழர்களின் அரசியல் பரப்பில் இளம் இரத்தம் புகுத்தப்பட்டு புதிய அரசியல் மாற்றம் உருவாக்கப்பட வேண்டிய வாரலாற்று தேவை இப்போது எழுந்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பேச்சாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

வலி.வடக்கு மாவை கலட்டி பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கடந்த 10 வருடமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் அரசியல் பரப்பில் செயற்பட்டு வருகின்றது. இருப்பினும் எமக்கான பாராளுமன்றம் அல்லது மாகாண சபைக்கான பிரதிநிதித்துவம் இல்லை.

அந்த பிரநிதிதித்துவத்தை தமிழ் மக்கள் தருவார்களாக இருந்தால் நிச்சையமாக தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஓரளவிற்கேனும் எடுக்க முடியும். அந்த அங்கீகாரத்தை தமிழ் மக்கள் எமக்கு தர வேண்டும்.

இதுவரை காலமும் இங்கு உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் அந்த அங்கீகாரத்தை கொடுத்திருந்தார்கள். இருப்பினும் தமிழ் மக்களுக்கான விமோசனம் இதுவரையில் கிடைக்கவில்லை.

எனவே தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் தர வேண்டும். வேலைவாய்ப்பு வீதி அபிவிருத்தி வீடமைப்பு போன்ற அனைத்தும் மத்தியில் உள்ள சிங்கள அரசாங்கம்தான் செய்ய முடியும். அவர்களிடம்தான் அதிகாரம் உள்ளது.

தமிழ் மக்கள் காலாகாலம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரம் என்பதுதான் இப்போது மிக முக்கியமான தேவையாக உள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அதிகாரம்தான் எமக்கு தேவை.

குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் நிதிகளை நேரடியாக இங்கு கொண்டுவந்து முதலீடுகளை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் எமக்கு தேவை. அந்த அதிகாரம் அல்லது அரசியல் உரிமையை பெற்றுக் கொள்வதற்கான தீவிர முயட்சியிலேயே நாங்கள் இப்போது ஈடுபட்டு வருகின்றோம்.

அந்த முயட்சியை நேர்மையாக செய்கின்ற செய்யக் கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான். இந்த முயட்சியில் நாங்கள் வெற்றிபெறாவிட்டால் அபிவிருத்தி என்பது இல்லாமல் போகும் அதே நேரம் எமது மண்ணில் எமது இருப்பினை இழந்து போகும் நிலை ஏற்படும். குறிப்பாக எமது வழிபாட்டை கல்வியை பொருளாதாரத்தை செய்ய முடியாமல் போகும்.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் மிகப் பெரும் பங்கு வகிப்பது மீன்பிடி. ஆனால் தமிழர் தாயகத்தின் கடற்பரப்பு அனைத்தும் சிங்கள மீனவர்களின் ஆதிக்கத்திற்குள் செல்லுகின்றது.

விவசாய நிலங்கள் உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் இராணுவத்தின் பிடியில் உள்ளது. பணப்பயிரான புகையிலை செய்கையை இனிவரும் காலங்களில் செய்ய முடியாது என்று அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

இவை அனைத்தும் தமிழர்களின் விவாசய பொருளாதாரத்தை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகும். இவற்றை தடுத்து பொருளாதார அழிப்பை நிறுத்த வேண்டும்.

முற்றுமுழுதாக 95 வீதமான தமிழ் மாகணவர்கள் கல்வி கற்ற யாழ். பல்கலைக்கழகத்தில் இப்போது 60 தொடக்கம் 70 வீதமான சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

அங்கு கல்வி கற்கும் 70 வீதமான சிங்கள மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்தை கூ10ழ உள்ள திருநெல்வேலியில் வசிக்கின்றார்கள்.
புத்த விகாரையுடன் எவ்வாறு சிங்கள குடியேற்றம் நாவற்குழியில் கொண்டுவரப்பட்டதோ அதே போன்று நிலைதான் பல்கலைக்கழகத்தை சூழ உள்ள திருநெல்வேலி பகுதிக்கும் நடக்கும்.

அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற தமிழர் தாயக பகுதிகள் தமிழர்களிடத்தில் இருந்து பறிபோய் இருக்கின்றது. இதே போன்றே விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்கு பின்னர் யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றார்கள்.

கடந்த 10 வருடமாக தமிழ் தலமைகள் என்று சொல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒட்டுக்குழுவான டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தான் புதிய அரசியல் தலமைத்துவம் இங்கு உருவாக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம். முதுமை அரசியலுக்கு நாங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும். தமிழர் அரசியலில் புதிய இரத்தத்தை புகுத்தி இளம் தலமுறையினருக்கான அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். இது வரலாற்று தேவை.

இவை அனைத்தையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகிய எங்களால் மட்டுமே முடியும். இப்போது தென்னிலங்கையில் சிங்கள பேரினவாதம் பெரும் எழுச்சி கொண்டுள்ளது. அதனை எதிர்க்க கூடிய இளம் தலமைத்துவம்தான் இப்போது தேவை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post