கொரோனா தாக்கம் தொடர்பில் வடக்கு மக்களுக்கு சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல் - Yarl Voice கொரோனா தாக்கம் தொடர்பில் வடக்கு மக்களுக்கு சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல் - Yarl Voice

கொரோனா தாக்கம் தொடர்பில் வடக்கு மக்களுக்கு சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்


கொரோனோ தொற்று தொடர்பில் வடக்கில் இதுவரையில் யாரும் அடையாளம் காணப்படவில்லை. அவ்வாறு தொற்று பரவினால் சிகிச்சை ஏற்பாடுகளும் யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே பொது மக்கள் இந்த நோய் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத்தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தொற்று பரவாமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் தொடர்பிலும் பொது மக்களுக்கு அறிவிறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் வடமாகாண நிலைமை பற்றிய தெளிவூட்டும் ஊடுக சந்திப்பொன்று யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்..

உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவரும் சூழலில் இலங்கையில் உள்நாட்டில் தொற்றுக்குள்ளான இரண்டு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு எடுத்துவருகின்றது.

அதன் அடிப்படையில் இந்நோய் மிகத்தீவிரமாக பரவிவரும் இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் சீனாவின் வுகான் (றுராயn)  பிரதேசத்திலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் இலங்கைக்கு வரும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

ஏனைய நாடுகளிலிருந்தும் சீனாவின் வுகான் (றுராயn)   பிராந்தியத்திற்கு வெளியே இருந்தும் வருபவர்கள் வதிவிடங்களில் அல்லது தங்குமிடங்களில் 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

இந்நிலையில் வடமாகாணத்து மக்கள் மத்தியில் இந்நோய் பற்றிய பதற்றமான சூழல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. எனினும் வடமாகாணத்தில் இதுவரை ஒருவரும் இந்நோயுடன் இனங்காணப்படவில்லை. எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

எனினும் இந்நோயின் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது.

1. உலகின் பலநாடுகளில் இந்நோய் தீவிரமாகப்பரவி வருவதால் வெளிநாட்டுப் பயணங்களை முற்றாகத் தவிர்க்கவும்.

2. இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் சீனாவின் வுகான் (றுராயn)  பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வருகை தந்திருந்தால் அவர்களது வதிவிடங்களில் 14 நாட்களுக்கு தனிமையில் கண்காணிக்க வேண்டப்படுகின்றார்கள்;.

இக்காலப்பகுதிக்குள் அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று உரிய வைத்திய ஆலோசனையைப் பெறவும்.

3. காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உடையவர்கள் இவை குணமடையும்வரை வேலைத்தளங்களுக்கு செல்லாது உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளவும்.

4. இக்கிருமித் தொற்றைத் தவிர்க்க உங்கள் கைகளை வீட்டிலும் வேலைத்தலத்திலும் அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவவும். வேலைத்தலங்களில் இதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும்.

5. சூடான நீராகாரங்களை அடிக்கடி பருகவேண்டும். குளிர்பானங்களை தவிர்த்தல் நன்று.

6. உங்கள் வீட்டிலும் வேலைத்தலத்திலும் தளபாடங்கள் மற்றும் அடிக்கடி பாவனையில் உள்ள பொருட்களை கிரமமாக அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும்.

7. வடமாகாணத்தில் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் தற்பொழுது மூடப்பட்டிருப்பதால் பொது இடங்களுக்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வதை தவிர்த்தல் நன்று.

மேலும் வடமாகாணத்தல் இக்கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டால் அவருக்கு சிகிச்சை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் யாழ் போதனா வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பதற்றமடையாது மேலே குறிப்பிட்ட தற்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post