என்னை நம்பியதற்கு நன்றி விஜய் அண்ணா என்று 'மாஸ்டர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. முதலில் விஜய் சேதுபதி காட்சிகள் பின்பு விஜய் காட்சிகள் என ஒவ்வொன்றாக முடித்து வந்தது படக்குழு.
இன்று சாந்தனு ஸ்ரீமன் கெளரி கிஷன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினருடன் சில பேட்ச் ஒர்க் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
'மாஸ்டர்' வாய்ப்பு தொடர்பாகவும் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் '129 நாட்கள் இடைவெளியற்ற படப்பிடிப்பு! மாஸ்டர்... இது புன்னகைக்கும் கண்களுடன் புன்னகை தவழும் முகம்! இந்தப் பயணம் என் இருதயத்துக்கு நெருக்கமானது.
என்னையும் என் குழுவையும் நம்பியதற்காக விஜய் அண்ணாவுக்கு நன்றி. என்னுடைய இந்த இயக்கக் குழு இல்லாமல் இந்த இமாலயப் பணியை எளிதில் முடித்திருக்க முடியாது. உங்களை நினைத்துப் பெருமையடைகிறேன்' என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனராஜ்
தற்போது இறுதிக்கட்டப் பணிகளைக் கவனித்துக்கொண்டே படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ளவுள்ளது படக்குழு. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment