அமெரிக்கா-தலிபான்களுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவால் தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா இன்று (புதன்கிழமை) வான் வழித் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் சோனி லெகெட் கூறுகையில் 'ஆப்கானிஸ்தானில் 11 நாட்களாக அந்நாட்டுப் படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக ஹெல்மண்ட் மாகாணத்தில் இன்று அமெரிக்க இராணுவத் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தலிபான் போராளிகள் ஆப்பானிஸ்தான் தேசிய பாதுகாப்புச் சோதனைச் சாவடிகள் மீது தீவிர தாக்தலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல் காரணமாக குறைந்தது 20 ஆப்கானிய வீரர்களும் பொலிஸாரும் உயிரிழந்துள்ளதாக அல் அரேபியா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த சனிக்கிழமை கட்டார் தலைநகர் டோஹாவில் 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப் பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும். கடந்த 18 ஆண்டுகால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டொலரைச் செலவிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தலிபான்கள் மீது இத்தகைய தாக்குதலை அமெரிக்க இராணுவம் நடத்தியுள்ளது.
Post a Comment