கடற்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் கடற்தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதுடன் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதுடன் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பரிவிற்குட்பட்ட அராலிதுறை கடற்கரைப் பகுதியிலையே இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டுகின்ற அப் பிரதேச மக்கள் சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.
குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் ஒன்றான வேலனை பிரதேச செயலர் பரிவிற்குட்பட்ட அராலி துறைமுக கடற்பரப்பில் பல இடங்களிலிருந்தும் வருகை தருகின்ற கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தக் கடற்கரையோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகின்ற பல்வேறு வகையிலான கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக முறையிட்டுள்ளனர்.
குறிப்பாக கடற்கரையை அண்மித்துள்ள பற்றைக் காடுகளுக்குள் இந்தக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அத்தோடு கழிவுகளைக் கொட்டிய பின்னர் அதனை தீவைத்தும் எரிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் அங்கிருக்கின்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன.
மேலும் அப் பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்த பிரதேசமாக காணப்படுகிறது. அந்தக் குப்பைகள், கழிவுகள், எச்சங்கள் கடலுக்குள்ளும் கலக்கின்றன. அத்தோடு அப்பகுதி எங்கும் துர்நாற்றமும் வீசுகின்றன. இதனால் பலருக்கும் பல்வெறு வகையிலான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
இத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற வேலையை அந்தப் பிரதேச சபையே மேற்கொள்வதாக கடற்தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இக் குற்றச்சாட்டை நிரூபிக்கின்ற வகையில் பிரதேச சபையின் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்ட குப்பைக் கழிவுகள் அங்கு கொண்டு வந்து கொட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் வேலனை பிரதேச சபைக்கு கழிவுகள் கொட்டப்படுவதற்கென்று தனியாக இடமொன்று ஒதுக்கபட்பட்டிருக்கின்ற போதும் அங்கு கழீவுகளைக் கொட்டாது கடற்கரையோரமாக உள்ள பற்றைகளுக்குள்ளே பிரதேச சபையே கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகிறது.
இவ்வாறு பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தச் செயற்பாடு தொடர்பில் பிரதேச சபையினரிடம் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர்ந்தும் அந்தக் கடற்கரையோர பற்றைகளுக்குள்ளேயே குப்பைகளைக் கொட்டுகின்ற நடவடிக்கைகளில் பிரதேச சபையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகையினால் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் பிரதேச சபைக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களிலேயே பிரதேச சபை; கழீவுகளை கொட்ட வேண்டுமென்றும் அதே போல அங்கு கழீவுகளைக் கொண்டு வந்த போடுவதனை யாரானாலும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே குறித்த இடத்தில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற கடற்தொழிலாளர்களுக்கும் சுற்றுச் சூழலக்கும் இயற்கை வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முதலில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த விடயத்தில் கடல்வளப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் அதிகார சபையினர் தலையிட்டு உரிய நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment